தற்போதைய செய்திகள்

வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை – அமைச்சர்கள் வழங்கினர்

திருவள்ளூர்

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் பொன்னேரியில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர்கள் பா.பென்ஜமின், நிலோபர்கபில், க.பாண்டியராஜன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வே.விஷ்ணு மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் வழங்கினர்.

திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி, உலகநாத நாராயணசாமி அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் நிலோபர் கபில், தமிழ் ஆட்சி மொழி, கலைபாண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் க.பாண்டியராஜன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வே.விஷ்ணு மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் தனியார் துறை வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பா.பென்ஜமின் கூறியதாவது :-

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் மூலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக, பள்ளியிறுதி வகுப்பு கல்வி தகுதியுடையோருக்கு மாதம் ரூ.300 வீதம் காலாண்டிற்கு ஒருமுறை ரூ.900ம், 12-ம் வகுப்பு கல்வி தகுதியுடையோருக்கு மாதம் ரூ. 400 வீதம் காலாண்டிற்கு ஒருமுறை ரூ.1200ம், பட்டப்படிப்பு தகுதியுடையோருக்கு மாதம் ரூ. 600 வீதம் காலாண்டிற்கு ஒருமுறை ரூ.1800 வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு பள்ளியிறுதி வகுப்பு கல்வி தகுதியுடையோருக்கு மாதம் ரூ. 600 வீதம் காலாண்டிற்கு ஒருமுறை ரூ.1,800ஃ-ம், 12-ஆம் வகுப்பு கல்வி தகுதியுடையோருக்கு மாதம் ரூ. 750வீதம் காலாண்டிற்கு ஒருமுறை ரூ.2,250, பட்டப்படிப்பு தகுதியுடையோருக்கு மாதம் ரூ. 1000 வீதம் காலாண்டிற்கு ஒருமுறை ரூ.3,000 வழங்கப்படுகிறது. 1.1.2020 முதல் 31.3.2020 வரையிலான காலாண்டிற்கு பொதுப்பிரிவினர் 1,819 நபர்களுக்கு ரூ.23,71,200-ம், மாற்றுத்திறனாளிகள் 1,114 நபர்களுக்கு ரூ. 25,05,300 வழங்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பாக, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு எளிதில் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இலவசமாக திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இதற்குரிய விண்ணப்பம் பெற்று பயனடையுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாண்புமிகு ஊரக தொழில்துறை அமைச்சர் அவர்கள் கூறினார்;.

இந்நிகழ்ச்சியில் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.பலராமன், திருத்தணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.எம்.நரசிம்மன், கும்மிடிப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி, திட்ட இயக்குநர்கள் க.லோகநாயகி (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), வை.ஜெயகுமார் (தமிழ்நாடு மாநில ஊரக (ம) நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்), வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் உதவி இயக்குநர் க.விஜயா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.