கடலூர்

சிதம்பரம் தில்லையம்மன் ஓடையில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி – கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

கடலூர்:-

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் முடுக்கி விட்டுள்ளது. அந்த வகையில் சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட தில்லையம்மன் ஓடையில் ஆகாய தாமரைகள் அகற்றும் பணியை சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சிதம்பரம் நகராட்சி பகுதிகளில் கன மழையால் வெள்ளம் பாதிக்கும் இடங்களை கண்டறிந்து அப்பகுதிகளில் மீட்பு பணிகளை உடனுக்குடன் செய்திட மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் மின்வாரிய அலுவலர்கள், நகர்புற ஆரம்ப நிலைய மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள், காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட 15 அரசு துறை அலுவலர்கள் உள்ளனர். பருவ மழை அதிகரித்தால் நகரில் தேங்கும் தண்ணீரினை உடனடியாக வெளியேற்ற அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக பாசிமுத்தான் ஓடையின் வடிக்கால் வாய்க்கால் மற்றும் தில்லையம்மன் ஓடை ஆகியவற்றில் மழை நீரை கான்சாகிப் வாய்க்கால் வழியாக வெளியேற்ற அந்த வாய்க்கால் பகுதியில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்றும் பணிகளுக்காக இரண்டு ஹிட்டாச்சி இயந்திரத்தின் மூலம் தூர்வாரும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மழையால் பாதிக்கபடும் இடங்களை கண்டறிந்து அங்கு வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 9 தற்காலிக முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கே.எ.பாண்டியன் எம்.எல்.ஏ. கூறினார்.

இந்நிகழ்வின்போது நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, பொறியாளர் மகாதேவன், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், முன்னாள் நகரமன்ற தலைவர் எம்.எஸ்.என்.குமார், முன்னாள் நகரமன்ற துணைத்தலைவர் செந்தில்குமார், முன்னாள் ஆவின் தலைவர் சுரேஷ்பாபு, நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, வீரமணி, சங்கர், வீராசாமி, செல்வராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.