தற்போதைய செய்திகள்

திருச்செந்தூர் கோயில் கந்த சஷ்டி திருவிழா : அதிகாரிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை

தூத்துக்குடி:-

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் திருச்செந்தூர் கோவிந்தம்மாள் திருமண மண்டபத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் கே.பனீந்தீரரெட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன், போ.சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நடைபெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். அம்மா அவர்கள் வழியில் செயல்படும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக நடப்பதற்கு அரசு சார்பிலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

கந்த சஷ்டி திருவிழாவிற்கு வெளி மாவட்டம், வெளி மாநில பக்தர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டு பக்தர்களும் அதிக அளவில் வருகை தருவார்கள் என்பதால் காவல்துறை மூலம் தேவையான பாதுகாப்பு வசதிகளை சரியான முறையில் ஏற்படுத்தி தரவேண்டும். பக்தர்களுக்கு தேவையான குடிநீர்வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். கழிப்பறைகளுக்கு தேவையான தண்ணீர் வருகிறதா என்பதை முன்கூட்டியே சோதனை செய்து சரிசெய்ய வேண்டும்.

பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவதால் அவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தற்காலிக வாகன நிறுத்துமிடங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். தற்போது மழை காலத்தில் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதால் சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை மூலம் குடிநீரில் குளோரின் கலந்து விநியோகம் செய்ய வேண்டும். மேலும் தூய்மை பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும். முதலமைச்சர் ஜனவரி 1 முதல் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில், திருவிழா காலங்களில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தொடர்ந்து கண்காணித்து பறிமுதல் செய்ய வேண்டும். பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் தேவையான எல்.இ.டி. திரைகள் அமைக்க வேண்டும். பொதுப்பணித்துறை மூலம் தற்காலிகமாக அமைக்கப்படும் கூடங்கள் ஆய்வு செய்து உறுதியளிக்க வேண்டும். இக்கூடங்களில் தேவையான மின்விளக்கு வசதிகளையும், இதன் அருகாமையில் தற்காலிக கழிப்பறை வசதிகளையும் ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து அலுவலர்களும் விழா சிறப்பாக நடைபெறுவதற்கு ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.

கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசுகையில், திருச்செந்தூர் கோயிலில் ரூ.4.15 கோடி மதிப்பில் தற்காலிக பிரகாரம் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். விரைவில் பணிகள் துவக்கப்படும் என்று தெரிவித்தார்.இதனைத்தொடர்ந்து அமைச்சர்கள் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா ஏற்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் கேட்டறிந்தனர்.