தற்போதைய செய்திகள்

முதியவர்களுக்கு திட்டங்கள் வழங்குவதில் முன்மாதிரி மாவட்டமாக திருவள்ளூரை உருவாக்குவோம் – அமைச்சர் க.பாண்டியராஜன் பேட்டி.

திருவள்ளூர்:-

முதியவர்களுக்கு திட்டங்கள் வழங்குவதில் முன்மாதிரி மாவட்டமாக திருவள்ளூரை உருவாக்கி காட்டுவோம் என்று அமைச்சர் க.பாண்டியராஜன் கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம் பாக்கம் ஊராட்சி, கசுவா கிராமத்தில் சேவாலயா முதியோர் இல்லத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை சார்பாக, சர்வதேச முதியோர் தின விழாவில் தமிழ் ஆட்சி மொழி , கலைபண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர்முதியோர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு சால்வை மற்றும் கீரிடம் அணிவித்து, நினைவு பரிசுகளை வழங்கினர்.

திருவள்ளூர் மாவட்டம் பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள சேவாலயா பள்ளியில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை சார்பில் சர்வதேச முதியோர் தினவிழா நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் மற்றும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு முதியோர்களுக்கு தலையில் கிரீடம் வைத்து மரியாதை செலுத்தினர். அவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் மூலம் மருத்துவ சிகிச்சை அளித்தனர். பின்னர் முதியோர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தி அசத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவ பணிகள் இணை இயக்குநர் பி.வி.தயாளன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் க.கிருஷ்ணராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் ச.மீனா, சேவாலயா நிறுவனர் முரளிதரன், மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மணிமாறன், மாவட்ட பொருளாளர் பி.ஜெயபால், மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.ராகேஷ் வெள்ளவேடு ராகேஷ், ரகு, சேட்டு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் அமைச்சர் க.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பெண் குழந்தைகளை காப்போம் திட்டத்தில் அகில இந்திய அளவில் திருவள்ளூர் மாவட்டம் முதலிடம் பெற்றது போன்று முதியவர்களுக்கு திட்டங்கள் வழங்குவதில் முன் மாதிரி மாவட்டமாக உருவாக்கப்படும்.22 மொழிகளை ஆட்சி மொழியாக்குவது கழகத்தின் தேர்தல் அறிக்கை. திமுகவின் தேர்தல் அறிக்கையில் சொல்லாததை திமுக தலைவர் கூறியுள்ளார்.

மாநிலங்களில் ஆட்சி மொழியாக உள்ள 20 மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம். நேர்மறையான கோரிக்கைகளுக்கு ஸ்டாலின் கோரிக்கை வைத்தால் நேர்மறையான அரசியல் சூழல் உருவாகும் வாய்ப்பு உள்ளது. கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைய மத்திய அரசாங்கத்திடம் 15 கோடி ரூபாய் கேட்டு உள்ளோம்.

இளைஞர்கள் நன்றாகவே உள்ளனர். அரசியலுக்கு வரும்போது கண்டிப்பாக வருவார்கள். கமலின் ஆதங்கம் தேவை இல்லாதது. நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததால் தற்போது விக்ரவாண்டி தேர்தலில் எழுச்சியுடன் சிறப்பாக பணியாற்றி வருகிறோம். கழக வேட்பாளர் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

இவ்வாறு அமைச்சர் க.பாண்டியராஜன் கூறினார்.