திருவள்ளூர்

உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றியே இலக்கு – கழக நிர்வாகிகளுக்கு, சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ. அறிவுரை

திருவள்ளூர்:-

வரும் உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீத வெற்றியை குறிக்கோளாக கொண்டு செயல்படுங்கள் என்று கழக நிர்வாகிகளுக்கு சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ. அறிவுரை வழங்கியுள்ளார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பொன்னேரியில் அமமுகவினர் 600 அக்கட்சியிலிருந்து விலகி மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். அவர்களை வரவேற்று மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட இயக்கம் இந்த இயக்கம். கழகம் தான் தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை தந்து இருக்கிறது. மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாய் கொண்டு தவ வாழ்க்கை வாழ்ந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திட்டங்களால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் பயனடைந்து உள்ளனர்.

அம்மா அவர்களின் வழியில் இன்று கழக அரசு சிறப்பாக நடைபெற்று வருகிறது. யாரும் எந்த குறையும் சொல்ல இயலாத அளவுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்கள். இதை பொறுக்காத எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரங்களை கட்டவிழ்த்து விட்டு, எம்.பி., தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். நாம் ஒரு சறுக்கலை சந்தித்து இருக்கிறோம்.

ஒவ்வொரு கால கட்டத்திலும், நாம் தோல்விக்கு பின்னர் மாபெரும் வெற்றியை சந்திப்பதே வழக்கம். அந்த அடிப்படையில் வருகிற உள்ளாட்சி தேர்தலில் நாம் மாபெரும் வெற்றி பெறுவோம். இதற்காக கழக நிர்வாகிகள் அனைவரும் அயராது பாடுபட வேண்டும். பொன்னேரி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவு பழவேற்காடு முகத்துவாரம் கழக ஆட்சிக்காலத்தில் தான் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் இது போல நமது அரசின் நல்ல திட்டங்களை மக்களிடத்தில் நீங்கள் கொண்டு சேர்க்க வேண்டும். ஒவ்வொரு கிளையிலும் ஒவ்வொரு தனிநபரையும் சந்தித்து மக்கள் நலத்திட்டங்களை எடுத்து சொல்லுங்கள். வரும் உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றியை குறிக்கோளாக கொண்டு செயல்படுங்கள். 2021-ல் கழக ஆட்சியே அமையும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பானு பிரசாத், மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ், மாவட்ட மீனவர் அணி செயலாளர் மாங்கோடு மோகன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் பத்மஜா ஜனார்த்தனம், ஒன்றிய கழக செயலாளர் மோகன வடிவேல், பொதுக்குழு உறுப்பினர் பொன்னுதுரை மீஞ்சூர் ஒன்றியம் வினோத், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் ஜி.தயாளன் எஸ்.பி.அருள் மற்றும் ஏராளமான மாவட்ட, ஒன்றிய, பேரூர், ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.