தற்போதைய செய்திகள்

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

தருமபுரி

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.2 கோடியே 14 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டடம் கட்டும் பணி மற்றும் காரிமங்கலத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் கிராம நிர்வாக அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டடம் கட்டும் பணி ஆகியவற்றை உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி.அன்பழகன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். இவ்விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லா கான் தலைமை வகித்தார்.

அதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, காரிமங்கலம், நல்லம்பள்ளி மற்றும் தருமபுரி ஆகிய வட்டங்களில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் 907 பயனாளிகளுக்கு ரூ.9 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசின் சார்பில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் 122 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 36 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பில், காரிமங்கலம் வட்டத்தில் 368 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 24 லட்சம் மதிப்பில், நல்லம்பள்ளி மற்றும் தருமபுரி வட்டத்தில் 417 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 38 லட்சம் மதிப்பில் என மொத்தம் 907 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே 99 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியதில் மகிழ்ச்சியடைகிறேன்.

தமிழக முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் மூலம் தருமபுரி மாவட்டத்தில் 497 ஏரிகள் மற்றும் வரத்து கால்வாய்கள் தூர்வாரப்பட்டு அதன் விளைவாக தற்போது மழைநீர் தேங்கி விவசாயம் மற்றும் குடிநீருக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது.

முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது தருமபுரி மாவட்ட நிர்வாகம் துரிதமான நடவடிக்கை மேற்கொண்டு 5 கட்டங்களாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சிகள் மூலம் இதுவரை 20 ஆயிரத்து 921 பேருக்கு முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட நலத்திட்டங்கள் ரூ.186 கோடியே 4 லட்சத்து மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

தகுதியான பயனாளிகளை தேர்வு செய்து கடந்த இரண்டு மாதங்களில் சிறந்த முறையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் செயல்பட்டதன் விளைவாக இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதற்காக அரசு ரூ.2363 கோடி ஒதுக்கியுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.