தூத்துக்குடி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.95 லட்சம் உண்டியல் காணிக்கை

திருச்செந்தூர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.95 லட்சம் கிடைத்துள்ளது.

இக்கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருமானம் ஒவ்வொரு மாதமும் எண்ணப்படுவதுண்டு. டிசம்பர் மாதத்துக்கான உண்டியல் எண்ணும் பணி கோவிந்தம்மாள் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோயில் செயல் அலுவலர் சா.ப.அம்ரித் தலைமையில் நடைபெற்ற இப்பணியில், உதவி ஆணையர்கள் தூத்துக்குடி சு.ரோஜாலி சுமதா, திருச்செந்தூர் வே.செல்வராஜ், அறநிலையத்துறை ஆய்வாளர்கள் மு.முருகன், மு.பகவதி, தக்கார் பிரதிநிதி ஆ.சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உண்டியல் எண்ணும் பணியில், சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை ஊழவாரப் பணிக் குழுவினர், கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.கோயில் நிரந்தர உண்டியல்களில் ரூ.76 லட்சத்து 55 ஆயிரத்து 956, கோசாலை உண்டியலில் ரூ.38 ஆயிரத்து 566, யானை பராமரிப்பு உண்டியலில் ரூ.32 ஆயிரத்து 252, அன்னதான உண்டியலில் ரூ.17 லட்சத்து 99 ஆயிரத்து 696, சிவன் கோயில் அன்னதான உண்டியலில் ரூ.6 ஆயிரத்து 921 என மொத்தம் ரூ.95 லட்சத்து 33 ஆயிரத்து 391, 590 கிராம் தங்கம், 7,100 கிராம் வெள்ளி, 12,060 கிராம் பித்தளை, 4,350 கிராம் செம்பு மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 116 இருந்தது.