தற்போதைய செய்திகள்

611 பேருக்கு திருமண நிதியுதவி,தாலிக்கு தங்கம் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்

திருப்பூர்:-

காங்கேயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கேயம், தாராபுரம் தொகுதிகளை சேர்ந்த 611 பயனாளிகளுக்கு ரூ. 4 கோடியே 20 லட்சத்து 57 ஆயிரத்து 923 மதிப்பில் தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண உதவித் தொகையை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் என்.எஸ்.என்.திருமண மண்டபத்தில், சமூக நலத்துறையின் சார்பில் திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது:-

இம்மண்ணுலகை விட்டு மறைந்தாலும் மக்களின் மனதில் என்றென்றும் வாழ்ந்து வருகின்ற புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழக மக்களின் வாழ்வு மேம்படுவதற்காக எண்ணற்ற பல திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வந்தார். குறிப்பாக பெண்களின் மீது மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்ட புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெண்களுக்கான திட்டங்களை தாயுள்ளத்தோடு வாரி வழங்கி வந்தார்.

அந்த வகையில், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2016-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஏழைப் பெண்களின் திருமண நிதியுதவித் திட்டத்தை விரிவுபடுத்தி திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கமும், 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு திருமண நிதியுதவியாக ரூ.25,000 ம், பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கு ரூ.50,000 ம் நிதியுதவி வழங்கி வறுமையில் உள்ள குடும்பப் பெண்களுக்கு வழங்கியவர் அம்மா அவர்களே. மேலும், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் நமது மாநிலத்தில் தான் மக்களுக்கான திட்டங்கள் சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, கல்வித்துறைக்கென புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எண்ணற்ற திட்டங்களை வழங்கியுள்ளார்.

அதில், பாடப்புத்தகம் முதல் மடிகணினி வரை சுமார் 16 வகையான கல்வி உபகரணங்களையும் நமது மாணவச் செல்வங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அம்மா அவர்களின் நல்வழியில் செயல்பட்டு வரும் முதலமைச்சர், அம்மா அவர்களின் மக்கள் நலத்திட்டங்களை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருகிறார்.

குறிப்பாக கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கிராமப்புற பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக விலையில்லா ஆடுகள், விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டமும் சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்தவிழாவில், காங்கயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, 10 ஆம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு முடித்த 280 பயனாளிகளுக்கு ரூ.1,21,75,000 மதிப்பிலான திருமண நிதியுதவி, திருமாங்கல்யத்திற்கு தலா 8 கிராம் வீதம் ரூ.75,53,549 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

முன்னதாக, தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு முடித்த 331 பயனாளிகளுக்கு ரூ.1,34,00,000 மதிப்பிலான திருமண நிதியுதவியினையும், திருமாங்கல்யத்திற்கு தலா 8 கிராம் வீதம் ரூ.89,29,374 மதிப்பீட்டில் தங்கம் என மொத்தம் ரூ.2,23,29,374 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார். காங்கேயம், தாராபுரம் தொகுதிகளில் மொத்தம் 611 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம், திருமண உதவி என ரூ. 41,20,57,923 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.