திருவண்ணாமலை

கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியில்லா கடனுதவி – திருவண்ணாமலை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பெருமாள்நகர் கே.ராஜன் தகவல்

திருவண்ணாமலை:-

கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியில்லா கடனுதவி வழங்கப்படுவதாக திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பெருமாள்நகர் கே.ராஜன் தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் வாழ்வு வளம் பெற கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியில்லா கடனை வழங்க முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பெருமாள்நகர் ராஜன் தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பொது பேரவை கூட்டம் திருவண்ணாமலை துளுவ வேளாளர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டுறவு இணைப்பதிவாளர் சிவகாமி தலைமை தாங்கினார். துணைப்பதிவாளர் சரவணன் முன்னிலை வகித்தார். மண்டல இணை பதிவாளர் நந்தகுமார் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் பெருமாள்நகர் ராஜன் உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத்தொகை மற்றும் சிறந்த சங்கங்களுக்கு பரிசு கேடயங்களை வழங்கி பேசியதாவது:-

விவசாய பெருமக்கள் என்றென்றும் நன்றாக இருக்கவும்¸ அவர்கள் வாழ்வில் வளம் பெறவும் கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியில்லா கடனை வழங்க முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியும்¸ கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூவும் உத்தரவிட்டதின் பேரில் அத்திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. கடன் வாங்கியவர்கள் அதை உரிய காலத்தில் திருப்பி செலுத்திட வேண்டும். தேர்தல் வரும் தள்ளுபடி செய்து விடுவார்கள் என நினைத்து விடக்கூடாது. கூட்டுறவுத்துறை நிலைத்து நிற்கவும்¸ அதை சார்ந்துள்ள பொதுமக்கள் நன்றாக வாழவும் வங்கியில் வாங்கிய கடனை உரிய நேரத்தில் திரும்ப செலுத்திட வேண்டும்.

பொதுமக்கள் வாங்கிய கடனை உரிய நேரத்தில் திரும்ப செலுத்தினால் மேலும் கூடுதல் தொகை கடனுதவி பெற்று தங்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம். அரிசி உற்பத்தியில் தஞ்சாவூரை மிஞ்சி திருவண்ணாமலை மாவட்டம் தமிழகத்தில் முதல் இடம் பெற்றுள்ளது. இதே போல் கூட்டுறவுத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் முதலிடம் பிடிக்க அனைவரும் பாடுபட வேண்டும்.

இவ்வாறு பெருமாள்நகர் கே.ராஜன் பேசினார்.