சிறப்பு செய்திகள்

சிறுபான்மை மக்களுக்கு சிறு தீங்கு ஏற்பட்டால் தடுத்து நிறுத்தும் சக்தியாக அ.தி.மு.க. அரசு இருக்கும் – துணை முதலமைச்சர் திட்டவட்டம்

திண்டுக்கல்

எந்தவொரு இடத்திலும் சிறுபான்மை மக்களுக்கு சிறு தீங்கு ஏற்பட்டால் அதை தடுத்து நிறுத்துகின்ற சக்தியாக அ.தி.மு.க. அரசு இருக்கும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் அடியனூத்து ஊராட்சியில் நேற்று நடைபெற்ற புதிய அரசு மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆற்றிய உரை வருமாறு:- 

இந்த இனிய விழா சிறப்பாக நடைபெற அனைத்து நிலைகளிலும் உறுதுணையாக இருந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் மூத்த முன்னோடி எங்களது அண்ணன் திண்டுக்கல் சீனிவாசன், இந்த விழாவை மக்கள் விழாவாக ஏற்பாடு செய்து, மிகசிறப்பாக இதற்கு முன்னால் 5 மருத்துவக் கல்லூரிகள் முதலமைச்சரால் தொடங்கப்பட்டு இன்றைக்கு 6-வது மருத்துவ கல்லூரியாக தொடங்கப்படுகின்ற இந்த நிகழ்ச்சி தான், அனைத்து மருத்துவ கல்லூரிகள் தொடங்கிய நிகழ்ச்சியை காட்டிலும் சிறப்பான நிகழ்ச்சியாக அனைத்து மக்களுடைய உற்சாக வெள்ளத்தோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இவ்வளவு பெரிய மக்களிடைய கூட்டத்தினை, மக்களடைய திரளை எழுச்சியான கூட்டத்தினை ஏற்பாடு செய்திருக்கின்ற அருமை அண்ணன், எங்களுக்கெல்லாம் அரசியலில் வழிகாட்டியாக இருந்து, நல்ல பல கருத்துக்களை சங்கீத ஒலியோடு எங்களுக்கு, எங்களுடைய அரசியல் வாழ்க்கைக்கு பயனுள்ள நல்ல பல கருத்துக்களை எங்களுக்கு ஆரம்ப காலத்திலிருந்து, மூத்த அண்ணனாக எங்களோடு இருந்து எங்களுக்கு வழிகாட்டியாக இருந்த அண்ணன் திண்டுக்கல் சீனிவாசனுக்கு எங்களுடைய நன்றியையும், வணக்கத்தினையும் இந்த நல்ல நேரத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

திண்டுக்கல் மாவட்டம் என்றாலே, திண்டுக்கல் என்றாலே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வீர வரலாற்றில், வெற்றி வரலாற்றில் ஒரு தனி இடம் அதற்கென்று உண்டு என்பதனை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இருக்கின்ற அனைத்து தொண்டர்களுக்கும், இந்த இயக்கத்தை உருவாக்கிய புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆருக்கு, இந்த இயக்கம் ஆழமாக வேரூன்றி, அடித்தளமிட்ட மாவட்டம்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆளுகின்ற பொறுப்பை தமிழக மக்களிடமிருந்து எந்த கட்சிக்கும், எந்த அரசியல் கட்சிக்கும் இல்லாத நிலையான இடத்தை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஒரு 10 ஆண்டுகாலம், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஒரு 17 ஆண்டுக்காலம் ஆக 27 ஆண்டுக்காலம் பெற்று தந்தது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அரசு தமிழகத்தில் மக்களுடைய ஒட்டுமொத்த தீர்ப்பாக பெற்று அரசு ஆளுகின்ற உரிமையை பெற்றதோடு மட்டுமல்லாமல், இன்றைக்கும் அம்மா அவர்களின் அரசை தலைமையேற்று கொண்டிருக்கின்ற எடப்பாடி கே. பழனிசாமியின் அரசு தொடர்ந்து நடைபெறுவதற்கு அச்சாரமாக, ஆணிவேராக,

அடித்தளமாக திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியுடைய இடைத்தேர்தல் தான் நம்முடைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு அடித்தளமிட்ட மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தை எண்ணுகின்ற போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒன்றரை கோடி தொண்டர்களும் நாங்கள் என்றைக்கும் திண்டுக்கல் மாவட்டத்திற்கு, நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்பதனை இந்த மாவட்டத்தின் மக்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறோம் என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். ஒருங்கிணைந்த மதுரை மாவட்டமாக இருந்த போது தாங்கள் எல்லாம் ஒரே குடும்பமாக இருந்த போதுதான் புரட்சித்தலைவர் அவர்கள் இந்த திண்டுக்கல் மாவட்டத்தை உருவாக்கினார்கள்.

மூத்த அண்ணன் திண்டுக்கல் சி. சீனிவாசன், திண்டுக்கல் மாவட்டத்தை பெற்றுக் கொண்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் தனியாக நமது கட்சியை பலமிக்க கட்சியாக வளர்ப்பதற்கு மிகப்பெரிய பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அதற்கு முன்னால் எங்களுக்கு தேனி மாவட்டம் பெறுகின்ற சூழ்நிலை ஏற்பட்டது. ஆக எந்த ஒரு அரசியல் எழுச்சியை தமிழ்நாட்டிற்கு உருவாக்க கூடிய தென்பாண்டிய மண்டலம் தான் மதுரை தான். ஆகவே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களும், எந்தவொரு நிகழ்ச்சியை ஆரம்பிக்க வேண்டுமென்றாலும், ஆக இருபெரும் தலைவர்களும் இந்த மாவட்டத்தில்தான் ஆரம்பிப்பார்கள் என்ற பெருமையை ஒருங்கிணைந்த இந்த மதுரை மாவட்டத்திற்கு இருக்கிறது என்ற பெருமையை இந்த நல்ல நேரத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

பெரியோர்களே, தாய்மார்களே, திண்டுக்கல் மாவட்டத்தில் வாழும் மக்களின் உடல் நலனைப் பேணிப் பாதுகாத்து, வளம் சேர்க்கும் வகையில் வரப்பிரசாதமாக, வரலாற்றுச் சிறப்பாக இங்கே அமையவிருக்கும் புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்படும் இந்த இனிய விழாவிற்கு தலைமை ஏற்கின்ற நல்வாய்ப்பினை எனக்களித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும், திண்டுக்கல் பொது மக்களுக்கும் எனது நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகத்திலுள்ள முக்கிய மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க மாவட்டமாக உள்ள திண்டுக்கல் மாவட்டம் பழம்பெரும் மாவட்டம், பல வரலாற்று சிறப்புகளை கொண்ட மாவட்டம். இங்குதான் நம்முடைய தண்டாயுதபானி சுவாமி எழுந்தருளி சிறப்பிக்கும் பழனி அமைந்துள்ள மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம். சிறு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெரியோர் வரை அனைவரையும் மனம் மகிழச் செய்யும் இயற்கை அன்னையின் புகலிடமாக உள்ள மலைகளின் இளவரசி கொடைக்கானலை தன்னகத்தே கொண்ட புகழ்மிக்க மாவட்டம் திண்டுக்கல்.

இந்த கொடைக்கானல் என்று சொல்லும்போது அது ஒரு காலத்தில் 2001-2011 வரை அதற்கு முன்னாலே பெரியகுளம் நாடாளுமன்றத்திலே, பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் இருந்தது, நானும் இந்த திண்டுக்கல் மாவட்டத்திற்கு பரிச்சயமாக 10 ஆண்டுகாலம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக பொறுப்பில் இருந்ததை நான் இன்றைக்கும் நன்றியோடு எனது பணியை ஆற்றுவதற்கு நல்ல வாய்ப்பாக திண்டுக்கல் மாவட்ட மக்கள் வழங்கினார்கள் என்பதையும் அந்த இரு சட்டமன்ற தொகுதியிலும் மிகப்பெரிய வெற்றியை கொடைக்கானலில் வசிக்கின்ற, மலைப்பகுதியில் வசிக்கின்ற மக்கள் எனக்கு வழங்கினார்கள் என்பதை இன்றைக்கும் நான் நன்றியோடு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அடுத்த நிலையில் உள்ள மிகப் பெரிய காய்கறி மார்க்கெட்டாகத் திகழும் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை அமைந்துள்ள மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம். அதேபோல் பூட்டுக்கு, பிரியாணிக்கு அப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட மாவட்டமான நம்முடைய திண்டுக்கல் மாவட்டத்திற்கு மேலும் அழகுக்கு அழகு சேர்க்கும் வண்ணம், பெருமைக்கு மேலும் பெருமை சேர்க்கும் வண்ணம், திண்டுக்கல் மாவட்டத்திற்கு வைரம் பொதித்த, மகுடத்தில் பதிக்கப்பட்ட வைரமாக திண்டுக்கல் மாவட்டத்தின் நீண்ட கால கனவு நனவாகியுள்ளது, அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி ஒரே நேரத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்பதனை இந்த நல்ல நேரத்தில் தெரிவித்துக் கொள்ள பெருமையாக இருக்கிறது.

ஆக ஒரே நேரத்தில் ஒரே அரசாணையில், 11 அரசு மருத்துவ கல்லூரிகளை ஒரே வருடத்தில் பெற்று தந்த ஒரே மாநிலம் நம்முடைய தமிழ்நாடு தான் என்பதை எண்ணுகின்ற போது மத்தியில் ஆளுகின்ற மத்திய அரசு எந்தளவுக்கு தமிழகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறது. இந்த மக்கள் நல்வாழ்வு துறை மட்டுமல்லாமல், தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து துறைகளிலும் சிறப்பான முறையில் நிர்வாகம் சென்று கொண்டிருக்கிறது என்பதற்காக அச்சாரமாக தான் மத்திய அரசு நமக்கு அளித்திருக்கிறது.

ஒரு காலத்தில் ஒரு மருத்துவ கல்லூரிக்கு அனுமதி பெறுவதற்கு மூன்று நான்கு முறை வருவார்கள், என்னென்னவோ கேட்பார்கள், அதற்கு பிறகும் ரிஜெக்ட் ஆகி விடும், ஆனால் இன்றைக்கு 11 மருத்துவ கல்லூரிகள் ஒரே வருடத்தில் உருவாக ஆதாரமாக இருந்தவர்கள் முதலமைச்சர், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ்வர்தனும், இவர்களுக்கு முத்தாய்ப்பாக பாரத பிரதமர் நரேந்திரமோடியும் காரண கருத்தாவாக இருந்தவர்கள் என எண்ணுகின்ற போது பாரத பிரதமருக்கும், மத்திய சுகாதார அமைச்சருக்கும், தமிழக மக்கள் சார்பாகவும், திண்டுக்கல் வாழ்கின்ற பொது மக்கள் சார்பாகவும் எங்களுடைய நன்றியையும், வணக்கத்தினையும் எந்நாளும் செலுத்துவதற்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

நான் எண்ணிப் பார்க்கிறேன் அம்மா அவர்கள் தமிழகத்தினுடைய முதலமைச்சராக 3-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற போது தமிழகத்தில் இருக்கின்ற மக்களால் கிடைக்கின்ற வரிகள் மூலமாக, அந்த வரிகளை மீண்டும் மக்களுக்கு நல்ல பல திட்டங்களாக எடுத்து செல்லுகின்ற போது அந்த திட்டம் மக்கள் நல திட்டமாக, தொலைநோக்கு திட்டமாக, தொலைநோக்கு திட்டம் என்ற அந்த திட்டத்தினுடைய முழுப் பயனும் அங்கு வாழுகின்ற மக்களின் திருக்கரங்களுக்கு நேரடியாக செல்லுகின்ற ஆட்சியாக அம்மா அவர்கள் நிகழ்த்தி சாதனை படைத்தார்.

பல்வேறு சமூக பாதுகாப்புதிட்டங்கள், மக்களுடைய அன்றாட வாழ்க்கைக்கு உகந்த திட்டமாக, அவர்களுடைய வாழ்க்கை நடைமுறைக்கு ஏற்ற திட்டமாக, அந்த திட்டத்தின் பலன் இன்றைக்கு வாழுகின்ற மக்களும் பெற வேண்டும், எதிர்காலத்தில் வாழுகின்ற 50, 100 ஆண்டுகளுக்கு பின்னால் வருகின்ற சந்தததிகளும் பயன்பெறும் வகையில் அம்மா பார்த்து, பார்த்து தொலைநோக்கு பார்வையோடு நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்கள் என்று எண்ணுகின்ற போது எங்களுக்கு மிகவும் பிரமிப்பாக இருக்கிறது.

அம்மா அவர்களின் தர்ம சிந்தனை, அவர்களுடைய சாதனைகள் தான் இந்திய இருக்கின்ற அனைத்து மாநிலத்திற்கு எடுத்துக்காட்டுகின்ற முதலமைச்சராக சாதனைகளை மக்களுக்கு அளிக்கின்ற, சாதனை முதலமைச்சர் அம்மா அவர்கள் எந்த அளவுக்கு தியாக வாழ்க்கை வாழ்ந்து அம்மா அவர்கள் தமிழக மக்களிடமிருந்து நம்மை விட்டு 2016ல் பிரிகின்ற போது ஆற்றினார்கள் என்பதை நாம் எண்ணுகின்ற போது நமக்கெல்லாம் மிகவும் பெருமையாக, பிரமிப்பாக இவ்வளவு பெரிய சாதனை மிக்க முதலமைச்சரிடம் பயிற்சி பெற்றவர்களாக முதலமைச்சர், நான், அமர்ந்திருக்கின்ற அமைச்சர்கள் உட்பட எல்லாருக்கும் அம்மா அவர்கள் எங்களுக்கு பயிற்சி தந்திருக்கிறார்கள்.

மக்களிடம் எவ்வாறு பயனுள்ள திட்டங்களை கொண்டு சென்று சேர்ப்பது, எவ்வாறு திட்டமிடுவது என்பதையெல்லாம் அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஒரு நல்ல பயிற்சியை, நல்ல அனுபவத்தை, செயலாற்றுகின்ற திட்டங்களின் தன்மையை மக்களுக்கு எடுத்துச் செல்லுகின்ற பாங்கினை எங்களுக்கு சொல்லி கொடுத்து பெறுகின்ற நிதியில் மாநிலத்தின் நிதியில் 48 சதவீதம், 50 சதவீதம் மக்களுடைய சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு மட்டும் தான் பயன்படுத்தினார்கள், அம்மா அவர்கள்.

மக்களுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருப்பிடம் என இதெல்லாம் அத்தியாவசியம் என எண்ணி மாதந்தோறும் விலையில்லா 25 கிலோ அரிசி வழங்கி ஏழை,எளிய மக்களின் பசிப்பிணியினை போக்கினார்கள். குருவிக்கு கூட வீடு உள்ளதென்று வாழ்கின்ற மக்களுக்கு குடிசைகள் இல்லாத கான்கிரிட் வீடுகளை கட்டித்தருகின்ற குடிசைகள் இல்லாத 2021 ஆவணத்தை பிரகடனப்படுத்தி இன்றைக்கு 5 இலட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு குடிசைகளில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2023க்குள் குடிசைகள் இல்லாத தமிழகமாக உருவாக்க திட்டத்தை வகுத்துள்ளோம்.

அதே போன்று மருத்துவக் காப்பீடு ஏழை, எளிய மக்களுக்கு நல்ல மருத்துவ வசதியை ஏற்படுத்த அம்மா அவர்கள் அம்மா மருத்துவ காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அம்மா ஏற்படுத்திய திட்டம்தான் இன்றைக்கு மத்திய அரசே கையில் எடுத்துக்கொண்டு செயலாற்றுகின்ற தன்மையை உருவாக்கியுள்ளது. அதேபோன்று தமிழகத்தில் உள்ள மாணவச் செல்வங்கள் பயன்பெறும் வகையில் 16 வகையான கல்வி உபகரணங்களை அரசின் மூலம் வழங்கும் திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் அந்த மாணவச்செல்வங்கள் நன்றாக படித்து, பட்டம், அதன் மூலமாக அந்த மாணவச்செல்வங்கள் ஒரு வேலை வாய்ப்பினை உருவாக்கிக் கொண்டால் அவர்களை சார்ந்திருக்கின்ற குடும்பத்திற்கு மிகப்பெரிய பொருளாதார அடிப்படையாக அமைந்திருந்திருக்கும் என்பதை எண்ணிருந்து 2009ல் ஆரம்பித்தார், 27,000 கோடி ரூபாய் ஒதுக்கினார்கள்.

இன்றைக்கு அம்மா அவர்களின் ஆட்சியில், பொற்கால ஆட்சியில் ரூ.34,000 கோடி, உயர்கல்வியில் ரூ.4000 கோடி ஆக ஒரு மாநிலத்தில் வரும் மொத்த வருவாயில் நான்கில் ஒரு பங்கு நிதியை கல்வித்துறைக்காக மட்டும் ஒதுக்குகின்ற ஒரே மாநிலம் இந்தியாவிலே தமிழகத்தில் மட்டும் தான். இதனால் பள்ளியிலும், கல்லூரியிலும் சேர்க்கை கூடியிருக்கிறது. படித்த பட்டதாரிகளின் எண்ணிக்கை கூடியிருக்கிறது.

தேர்ச்சி கூடியிருக்கிறது என்பதையெல்லாம் இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். பொருளாதார வளர்ச்சி தொழில் வளர்ச்சி உலக முதலீட்டாளர் மாநாட்டை அம்மா அவர்கள் நடத்திக்காட்டி வழி வகுத்தார். இன்றைக்கு அம்மா அவர்களுக்கு பின்னால் 2ஆம் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி தொழில் வளம் பெருவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு இந்தியாவிலேயே மகாராஷ்டிரம் அடுத்து அதிக தொழிற்சாலை கொண்ட மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது என்பதனையும்,

விவசாயம், இந்த விவசாயத்தில் அம்மா அவர்களின் ஆட்சியில் 5 ஆண்டுகளில் நெல் உற்பத்தில் இந்திய முதல் மாநிலமாக அடைந்த காரணத்தினால், மத்திய அரசிடம் க்ருஷ் கர்மா விருதினை நாம் பெற்றிருக்கிறோம். சாதனை மிகுந்த ஆட்சி, இவையெல்லாவற்றுக்கு மேலாக நம்முடைய ஜீவாதார பிரச்சினை.

தமிழகத்துடைய ஜீவாதார பிரச்சினைகள் காப்பாற்றுவதாக இருந்தாலும் அதை அம்மா அவர்களால் ஏற்படுத்தப்பட்ட வரலாறு தான் காவேரி நதிநீர் பங்கீட்டில் நமக்கும், கர்நாடகத்திற்கும் பிரச்சினை ஏற்பட்டு காவிரி நடுவர் மன்றத்தில் நமக்கு சாதகமான தீர்ப்பு வந்த போது, அந்த தீர்ப்பினை அரசிதழில் வெளியிட்டால்தான் அது காலத்திற்கு நிலைக்கும் அம்மா அவர்கள் கூறினார், ஆனால் அப்போது இருந்த திமுக-காங்கிரஸ் மத்தியிலும், மாநிலத்திலும் அவர்களுக்கு மக்கள் மீது அக்கறையில்லை, அதைக் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். அதற்கு அம்மா ஆட்சி பொறுப்பேற்றவுடன் அந்த காவேரி இறுதி தீர்ப்புக்கு உச்சநீதிமன்ற வரை சென்னை அரசாணை பெற்று தந்து வரலாற்றில் பதிவு செய்தவர் அம்மா அவர்கள்.

பின்னால் நம்முடைய திண்டுக்கல், தேனி, மதுரை முதல் இராமநாதபுரம் வரை ஆகிய மாவட்டங்களுக்கு முல்லை பெரியாறு அணை பிரச்சினை, நமக்கும், கேரளாவுக்கும் சிறு சிறு பிரச்சினைகள் இந்த பிரச்சினையும் அம்மா அவர்களால் உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு சென்று அதற்கு நல்ல தீர்ப்பாக குறைக்கப்பட்ட 132 அடி நீர்தேக்க கொள்ளளவை 148 அடி கொள்ளளவாக நீர்தேக்கி கொள்ளுகின்ற நல்ல் தீர்ப்பை வாங்கி தந்த தலைவி நமது அம்மா அவர்கள் தான்.

அம்மா அவர்கள் நடந்து வந்த பாதையில் அடிபிறழாமல், அப்படியே எந்த திட்டத்தையும் குறைக்காமல், அதைவிட கூடுதலாக வழங்கி அம்மா அவர்கள் எப்படி காவிரி பிரச்சினைக்கு அரசாணை பெற்று தந்தார்களோ, அதே போன்று காவிரி டெல்டா விவசாயிகளின் உயிர் மூச்சாக விளங்கும் காவிரி டெல்டா பகுதிகளில் மிகப்பெரிய அச்ச சூழ்நிலை, அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டிருப்பதை எண்ணி அந்த பகுதி மக்கள் அச்சம் கொண்டிருந்த நேரத்தில் நம்முடைய முதலமைச்சர் அப்பகுதிகளை பாதுக்காக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்தார். இதிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசு தான் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் அரசாக, மக்களுக்கு நல்ல பல திட்டங்களை கொண்டு சேர்க்கின்ற அரசாக இன்றைக்கு ஆட்சி செய்து கொண்டிருப்பது பெருமையாக இருக்கிறது.

இன்றைக்கு எதிர்க்கட்சிகள் அவர்கள் சுயநலத்தில் எதுவேண்டுமானாலும் சொல்லலாம், எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்று எண்ணிக் கொண்டு பல்வேறு தகவல்களை உண்மைக்கு மாறான தகவலை எப்படியாவது குழப்பத்தை ஏற்படுத்தி, சட்ட ஒழுங்கை சீர்க்குலைக்க அவர்கள் எத்தனை முயற்சிகள் மேற்கொள்ள நினைச்சாலும், தமிழகத்தை பொறுத்தவரையில் மக்கள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எவ்வளவு பிரச்சினையாக இருந்தாலும், சட்டஒழுங்கு கெடவில்லை. இன்றைக்கு இந்தியாவிலேயே சட்டஒழுங்கை பாதுகாக்கின்ற ஒரு மாநிலமாக இன்றைக்கு தமிழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

அவர்கள் நினைக்கிறார்கள் எப்படியாவது சிறுபான்மை மக்களை நம்மிடமிருந்து பிரித்து அரசியல் ஆதாயம் தேடுவோம் என்று நினைக்கிறார்கள். அது நடக்காது, முதலமைச்சரும், நானும், பலமுறை சட்டமன்றத்திலும், வெளியிலும், எந்தவொரு சிறுபான்மை மக்களுக்காவது தமிழகத்தில் எந்தவொரு இடத்திலாவது சிறு தீங்கு ஏற்பட்டால் அதை தடுத்து நிறுத்துகின்ற சக்தியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசு இருக்கும் என்று உறுதியாக சொல்லி இருக்கின்றோம்.

மக்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகளுக்கு உத்தரவாதம் அளிப்பது அரசினுடைய கடமை, அந்த உத்தரவாதத்தை இன்று நடைபெற்று கொண்டிருக்கின்ற அம்மாவின் அரசு, முதலமைச்சர், நான் உட்பட அனைத்து அமைச்சர் உறுதி சொல்லியிருக்கின்றோம், எந்த பிரச்சினையும் அது இஸ்லாமிய பெருமக்களாக இருந்தாலும் சரி, கிறிஸ்துவ பெருமக்களாக இருந்தாலும், சிறுபான்மை மக்கள் யாராக இருந்தாலும் சரி, ஏழை எளிய மக்களை காக்கின்ற அரசாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் செயல்படும் என்று கூறி, இந்த சிறப்பான விழாவினை சீரோடும், சிறப்போடு நடைபெற கடமையாற்றிய அண்ணன் மூத்த முன்னோடி திண்டுக்கல் சி.சீனிவாசனுக்கும், அவரோடு உறுதுணையாக பணியாற்றிய அனைத்து அரசு அலுவலர்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றினார்.