தற்போதைய செய்திகள்

இடைத்தேர்தலில் தி.மு.க. தோல்வி அடைவது உறுதி – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ சவால்

தூத்துக்குடி:-

இடைத்தேர்தலில் தி.மு.க. தோல்வி அடைவது உறுதி என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.

தேசப்பிதா காந்தியடிகளின் 151-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனை தொடக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் வீ.பி.ஜெயசீலன், உதவி ஆட்சியர் சிம்ரன் ஜித் கலோன், தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு தீபாவளி விற்பனையை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி எம்.பி. தற்போது நடைபெறவுள்ள 2 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவோடு போட்டியிடும் கழகத்தை விமர்சனம் செய்துள்ளார். அவருக்கு நான் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி பொய் பிரச்சாரம் செய்ததோடு மட்டுமல்லாமல் பொய்யான வாக்குறுதிகளை சொல்லி ஏமாற்றி வெற்றி பெற்றார். இதனை அனைவரும் அறிவார்கள். தூத்துக்குடி தொகுதி மக்கள் கனிமொழிக்கு ஓட்டு போட்டு விட்டு தங்கள் மனகுமுறலை யாரிடம் போய் சொல்வது என்று என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள். நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதி மக்களும் மிக தெளிவாக இருக்கின்றார்கள்.

தேர்தல் சமயத்தில் பொய்யான வாக்குறுதிகளை கூறி ஓட்டு கேட்பதையே. வாடிக்கையாக கொண்டுள்ள திமுகவினருக்கு இந்த முறை தோல்வியை பரிசாக கொடுக்க வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்து விட்டனர். இதை அறிந்த திமுகவினர் இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதி மக்களிடம் ஏதாவது பொய்யை சொல்லி ஏமாற்றி விடலாம் என்று ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் தப்பு கணக்கு போடுகின்றனர். இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடைவது உறுதி என்று சவாலாக கூறுகிறேன்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.