தற்போதைய செய்திகள்

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை சந்தித்து தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் நன்றி

விருதுநகர்

தீப்பெட்டிக்கான ஜி.எஸ்.டி வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டதற்கு, அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் விருதுநகர், சிவகாசி, சாத்தூர், நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆகிய பகுதியில் தான் தீப்பெட்டி தொழில் நடைபெற்று வருகிறது. 300-க்கும் மேற்பட்ட பகுதி நேர எந்திர தீப்பெட்டி ஆலைகளும், 20-க்கும் மேற்பட்ட முழு நேர எந்திர தீப்பெட்டி ஆலைகளும், இவற்றை சார்ந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு தீப்பெட்டி ஆலைகளும் இயங்கி வருகிறது.

இத்தொழிலில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே மூலப்பொருள்களின் விலை உயர்வு, சிறு தொழில் பட்டியலில் இருந்து நீக்கம் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டு வந்த தீப்பெட்டி தொழிலுக்கு மத்திய அரசு விதித்துள்ள 18 சதவீத வரி ஜி.எஸ்.டி வரி விதிப்பு பாதிப்பை ஏற்படுத்தியது. ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும் என்று அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மூலம் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

அதனைத்தொடர்ந்து தீப்பெட்டிக்காண ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தீப்பெட்டிக்கான ஜி.எஸ்.டி வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் ஜி.எஸ்.டி வரி 18-ல் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டதிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை நேற்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் சாத்தூர், சிவகாசி, கோவில்பட்டி, விருதுநகர் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் சிவகாசி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் நாகராஜன், செயலாளர் பயோனியர் குரூப் ரமேஸ்பிரபு, அய்யன் குரூப் அதிபதி, சுந்தரவேல் குரூப் ஸ்ரீராம் அசோக், காளீஸ்வரி சென்பகராஜன், சொளந்திபாண்டியன் குரூப் கார்த்திகேயன், சாத்தூர் ரவி, தினே்ஸ், பத்மநாபன், கோவில்பட்டி தேவதாஸ் மற்றும் தொழில் அதிபர்கள் அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது சாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன், திருவில்லிபுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.