சிறப்பு செய்திகள்

பிரதமர் மோடி- சீன அதிபர் சந்திப்பு : முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் நேரில் ஆய்வு

காஞ்சிபுரம்:-

பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின் பிங் சந்திப்பு தொடர்பான முன்னேற்பாடு பணிகளை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று மாமல்லபுரம் சென்று ஆய்வுசெய்தார். அவருடன் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களும், அதிகாரிகளும் சென்றனர்.

மாமல்லபுரம் நகரில் சீன அதினர் ஜின் பிங்குடன் பிரதமர் மோடி 3 நாட்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். வரும் 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை இருவரும் மாமல்லபுரத்தில் தங்குகிறார்கள். இந்த இரு தரப்பு உச்சி மாநாட்டின்போது இரு தலைவர்களும் பேச்சு நடத்தும் வேளையில் கிழக்கு கடற்கரையோர எழில்மிகு நகரான மாமல்லபுரத்தின் புராதான சிற்பங்களையும், கோயில்களையும் பார்வையிடுகின்றனர்.

பேச்சுவார்த்தையில் இரு நாட்டு வர்த்தகம் தொடர்பான விஷயங்கள் முக்கிய இடம் பெறும். அதைத்தொடர்ந்து இரு நாட்டு அதிகாரிகளுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டுள்ள மாமல்லபுரத்தின் சிற்பங்கள் குறித்தும், சிறப்புகள் குறித்தும் சீன அதிபருக்கு விளக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மத்திய, மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள் கண்காணிப்பில் நடைபெற்று வருகின்றது.

இரு தலைவர்களும் தங்க உள்ள கோவளம் தாஜ் நட்சத்திர ஓட்டல், சுற்றிப்பார்க்க இருக்கும் மாமல்லபுரம் அர்ஜூன் தவசு, ஐந்து ரதம், கலங்கரை விளக்கம், கடற்கரை கோயில் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று மாமல்லபுரம் சென்றார். அங்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகளையும் ஆய்வு செய்தார். அரஜூன் தவசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். ஏற்கனவே சீன அதிகாரிகள் குழு, மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் தமிழக தலைமை செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்டோர் மாமல்லபுரத்தில் பலமுறை ஆய்வு நடத்தி உள்ளார்கள்.

இருநாட்டு தலைவர்களின் வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள புராதான மையங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தார்சாலைகள் போர்க்கால அடிப்படையில் அமைக்கப்பட்டு வருகின்றன. அங்குள்ள பூங்காக்கள் அழகுபடுத்தப் படுகின்றன. இதனால் மாமல்லபுரமே புதுபொலிவுடன் காட்சி அளிக்க தொடங்கி விட்டது.

சுகாதாரம், குடிநீர், மின் விளக்கு வசதிகளை பேரூராட்சிநிர்வாகத்தினர் விரைந்து செய்து வருகின்றனர். மத்திய தொல்லியல்துறை பாரம்பரிய சின்ன மையங்களில் அழகிய புல்வெளிகளை அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு முன்னேற்பாடு ஆயத்த பணிகள் குறித்தும் தலைமை செயலாளர் க.சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் இரண்டாம் கட்டமாக பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் சுற்றி பார்த்து ஆய்வு செய்தனர்.

அதேபோல் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் போகலே மற்றும் பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினரும் மாமல்லபுரம் வந்துள்ளனர். கடற்கரை கோயில் முழுவதும் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளதை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டு உள்ளன. மாமல்லபுரம் பகுதியில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்ட தள்ளுவண்டிகள் மற்றும் பெட்டி கடைகள் அனைத்தும் நகருக்கு வெளியே அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது. கடைகளை அகற்றிய பகுதிகளில் பூஞ்செடிகள் வைக்கப்பட்டு வருவதால் மாமல்லபுரமே இயற்கையின் எழில் கொஞ்சும் நகரமாக காட்சி அளிக்கிறது.

இரு நாட்டு நட்புறவை உணர்த்தும் வகையில் இரண்டு யானைகளுடன் கூடிய புத்தர் சிலை மாமல்லபுரம் கடற்கரை கோயில் எதிரே வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியும், சீன அதிபரும் அதிக நேரம் சந்தித்து பேசும் இடமாகவும், கலை நிகழ்ச்சியை பார்த்து ரசிக்கும் இடமாகவும் கடற்கரை கோயில் உள்ளது. இரு நாட்டு தலைவர்கள் பேச்சு நடத்திய பின்னர் பாரம்பரிய மிக்க கலை நிகழ்ச்சிகள் அங்கு நடைபெற உள்ளன.