தமிழகம்

இடைத்தேர்தல் முன்னேற்பாடு பணி – தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு.

சென்னை:-

நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி காணொலி காட்சி மூலம் ஆய்வு நடத்தினார்.

வாக்காளர் சரிபார்க்கும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நேற்று காணொலிமூலம் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் / ஆட்சித் தலைவர்கள் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ஆகியோருடன் நடத்தினார்.

இந்த ஆய்வு கூட்டத்தில், வாக்காளர் பதிவு அலுவலகத்தில் இயங்கும் வாக்காளர் வசதி மையத்தின் மூலம் 2103269 நபர்களும், வாக்காளர் உதவி எண் 1950 (மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும்) மூலமாக 103464 நபர்களும், பொது சேவை மையங்களை அணுகியதன் மூலமாக 87192 நபர்களும், செல்லிடபேசி செயலி (வாக்காளர் உதவி எண்) மூலமாக 1158518 நபர்களும், தேசிய வாக்காளர் சேவை தளத்தின் மூலமாக 21421 நபர்களும் என மொத்தம் 34,73,864 வாக்காளர்கள் தங்களின் விவரங்களை சரிபார்த்து இதுவரை உறுதி செய்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

மகளிர் சுய உதவிக் குழு / ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணியாளர்களையும் இத்திட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்ள அறிவுரை வழங்கினார். மேலும், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் இத்திட்டப் பணிகள் குறித்த செயல்பாட்டு வழிமுறைகள் / செயல்முறைத் திட்டத்தினை வடிவமைத்து அதன்படி செயல்படும்போது கூடுதலான வாக்காளர் தங்கள் விவரங்களை சரிபாரித்து உறுதி செய்து கொள்ளவும், இத்திட்டம் முழுமையாக வெற்றி பெறவும் வழிவகுக்கும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவுரை வழங்கினார்.

வாக்காளர் சரிபார்க்கும் திட்டம் 15.10.2019 அன்றுடன் முடிவடைவதால் வாக்காளர் தாமாக முன்வந்து இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் உள்ள தங்களின் விவரங்களை சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மேலும், இக்கூட்டத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, விழுப்புரம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட தேர்தல் அலுவலர்கள் / ஆட்சித் தலைவர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ஆய்வு நடத்தினார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் காவல் துறைத் தலைவர் (நலன்) எஸ்.என்.சேஷசாயி, மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வையின் இணை ஆணையர் அருண் சத்யா ஆகியோர் உடன் இருந்தனர்.