தமிழகம்

வாக்காளர் சரிபார்த்தல் அக்.15 வரை நீட்டிப்பு : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை:-

தமிழகத்தில் வாக்காளர்களே தங்கள் விவரங்களை வாக்காளர் பட்டியலில் சரிபார்த்து, திருத்தம் செய்யும் ‘வாக்காளர் சரிபார்த்தல் திட்டம்’ அக்டோபர் 15-ம் தேதி வரை நீட்டிக் கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.

இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர்களே தங்கள் விவரங்களை வாக்காளர் பட்டியலில் சரிபார்த்து, பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களில் திருத்தங்கள் செய்தல், புகைப்படம் மாற்றுதல் போன்றவற்றை மேற்கொள்ளும் வாக்காளர் சரிபார்த் தல் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

வழக்கமாக செப்.1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, தொடர்ந்து வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறும் நிலையில், இந்த ஆண்டு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியதுடன், அக்.15-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவித்தது.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு போதிய அளவில் பொது மக்களை சென்றடையாத காரணத் தால், மொத்தம் உள்ள 5 கோடியே 92 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களில், வாக்காளர் சரிபார்த்தல் திட் டத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம் (செப்.30-ம் தேதி) வரை குறைந்த அளவே வாக்காளர்கள் இத்திட்டத்தை பயன்படுத்தியுள்ளனர். இதையடுத்து, இன்னும் 15 நாட் களுக்கு திட்டத்தை நீட்டித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட் டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியதாவது:-

கடந்த செப்.1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை வாக்காளர் சரிபார்த்தல் திட்டத்தில் 23 லட்சத்து 37 ஆயிரம் பேர் மட்டுமே சரிபார்த்துள்ளனர். இதில் கைபேசி செயலி மூலம் 9 லட்சம் பேரும், நேரடியாக வாக்காளர் உதவி மையங்களில் 12 லட்சத்து 85 ஆயிரம் பேரும் சரிபார்த்துள்ளனர்.

ஏற்கெனவே, அக்.15-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ‘வாக்காளர் சரிபார்த்தல் திட்டம்’ அந்த நாள் வரை நடப்பதால், வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகள் இடைத்தேர்தலைப் பொறுத்தவரை, ஒரு தொகுதிக்கு 2 செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். தற்போது நாங்குநேரி தொகுதிக்கு மட்டும் ஒரு பார்வை யாளராக அஜய்குமார் சிங் நியமிக் கப்பட்டுள்ளார். மீதமுள்ளவர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்.

விக்கிரவாண்டியில் முதல்வர் படத்துடன் கூடிய போஸ்டர்கள் இருப்பதாக திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கோரப் பட்டுள்ளது. மேலும், தற்போது இரு தொகுதிகளுக்கும் ஒரு தொகுதிக்கு 3 கம்பெனி என்ற வகையில் 6 கம்பெனி துணை ராணுவப் படையினரை அனுப்ப தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், காவல் துறையினர் நிலைமையை ஆய்வு செய்து, கூடுதலாக தேவைப்பட்டால் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப் படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.