திருவண்ணாமலை

576 கர்ப்பிணி பெண்களுக்கு விலையில்லா ஊட்டச்சத்து பெட்டகம் – வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார்

திருவண்ணாமலை:-

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த நயம்பாடி பகுதியில் தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை சார்பில் இலவச மருத்துவ முகாம் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கலசப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 576 கர்ப்பிணி பெண்களுக்கு ரத்த சோகையை போக்கும் ஊட்டச்சத்துகள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினார். அப்போது பெட்டகத்தை பெற்றுக் கொண்ட கர்ப்பிணி பெண்கள் தமிழக அரசுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

இம்முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் விக்னேஷ், கர்ப்பிணி பெண்கள் உட்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து உணவுகள் குறித்தும் மழைக்காலத்தில் ஏற்படும் நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்தும் பொது மக்களுக்கு விளக்கினார்.

மேலும் இம்மருத்துவ முகாமில் இ.சி.ஜி, ஸ்கேன், இருதய நோய், மகப்பேறு மருத்துவம், பால்வினை நோய், எலும்பு மூட்டு, புற்றுநோய், பல் காது மூக்கு தொண்டை வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் துரை, பொதுக்குழு உறுப்பினர் பொய்யமொழி, மருத்துவ அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் சுகாதார ஆய்வாளர்கள் செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.