தற்போதைய செய்திகள்

3015 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம்- திருமண நிதியுதவி – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்

விருதுநகர்:-

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய 3 இடங்களில் சமூக நலத்துறையின் மூலம் திருமண நிதியுதவி வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு 3015 பயனாளிகளுக்கு ரூ.20 கோடியே 68 லட்சத்து 91 ஆயிரத்து 240 மதிப்பிலான திருமாங்கல்யத்திற்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவிகளை வழங்கி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஏழை எளிய மக்களுக்காக பல அற்புதமான மக்கள் நலத்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வந்தார். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சிந்தனையில் உதித்த உன்னதமான திட்டமான தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் திட்டம்.

வசதி படைத்தவர்களை போன்று ஏழை, எளிய பெண்களும் தாலிக்கு தங்கத்தை அணிய வேண்டும் என்று தாயுள்ளத்தோடு அம்மா அவர்கள் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தை நடைமுறைபடுத்தினார். போதிய பணவசதி இல்லாத காரணத்தால் மணமகன் வீட்டாரால் ஏழை பெண்களின் திருமணம் தடைபடுவதை பார்க்க முடிந்தது. இது போன்ற நிகழ்வுகள் ஏழை பெண்களுக்கு ஏற்படக்கூடாது என்று திருமண நிதியுதவி திட்டத்தையும் கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்தினார்.

இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத உலகில் வேறு எங்குமே செயல்படுத்தாத திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். ஏன் தங்கத்தை வெட்டி எடுக்கும் பெல்ஜியம் நாட்டில் கூட ஒரு கிராம் தங்கம் கூட இலவசமாக வழங்கப்படுவதில்லை.

அம்மா அவர்களின் கனவுத்திட்டமான உழைக்கும் மகளிருக்கு இரு சக்கரம் வாகனம் வழங்கும் திட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் விண்ணப்பித்த அனைத்து உழைக்கும் மகளிர்களுக்கு மானிய விலையிலான இரு சக்கர வாகனங்களை வழங்கி தமிழகத்திலேயே முதல் மாவட்டம் என்ற நிலையை எய்திருக்கிறது. அந்த அளவிற்கு நல்ல ஒரு நிர்வாகத்தை மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதலின்படி மாவட்ட நிர்வாகத்தில் பணியாற்றுகின்ற அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள்.

அம்மா அவர்களின் வழியில் செயல்படும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மிக சிறப்பாக செயல்பட்டு ஆட்சியை நடத்தி வருகிறார். தங்கம் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையிலும், முதலமைச்சர் தலைமையிலான அரசு தாலிக்கு தங்கத்தை ஏழை எளிய மக்களுக்காக தொடர்ந்து வழங்கி வருகிறது. அம்மா அவர்கள் கல்விக்காக விலையில்லா நோட்டுப்புத்தகங்கள், புத்தகப்பை, நான்கு செட் சீருடைகள், காலணிகள், வண்ண பென்சில்கள், கணித உபகரணப்பெட்டி, புவியியல் வரைபட நூல், கல்வி உபகரணங்கள், விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி,

மதிய உணவு, மாணவ, மாணவியர் இடைநிற்றலை குறைப்பதற்கான சிறப்பு ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியதன் விளைவாக இன்று தமிழகம் கல்வி வளர்ச்சியில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. மேலும் தமிழக அரசு பெண்களின் கல்விக்கு தேவையான அனைத்து உதவிகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் திட்டங்களின் பயனாக பட்டயப்படிப்பு முடித்த பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பிறப்பு முதல் முதிர்வுவரை வாழ்வின் அனைத்து கட்டங்களிலும் பெண்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

ஏழை எளிய மக்களின் உயர்வுக்காக அம்மா அவர்கள் அறிவித்துச் சென்ற திட்டங்களையும், தமிழக மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செய்வதற்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு தயாராக இருக்கிறது.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.

இந்நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜவர்மன், மு.சந்திரபிரபா, மாவட்ட வருவாய் அலுவலர் கோ.உதயகுமார், மாவட்ட சமூக நல அலுவலர் ஆர்.ராஜம் உட்பட அரசு அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.