சிறப்பு செய்திகள்

நாடாளுமன்றத்தில் உங்கள் எம்.பி.க்களை பேச சொல்லுங்கள் – தி.மு.க.வினருக்கு முதலமைச்சர் அறிவுரை

சென்னை :-

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிக்கான கூலி குறித்து நாடாளுமன்றத்தில் உங்கள் உறுப்பினர்களை பேச சொல்லுங்கள் என்று திமுகவினருக்கு முதலமைச்சர் அறிவுரை வழங்கினார்.

சட்டப்பேரவையில் நேற்று நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் தி.மு.க. கொறடா சக்கரபாணி பேசுகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு கூலி வங்கியில் செலுத்தப்படுகிறது. கூலி வேலை செய்வர்கள் வங்கிக்கு சென்று பணத்தை எடுக்க சிரமப்படுகிறார்கள். மேலும் கூலி மிகவும் தாமதமாக வருகிறது என்றார்.

இதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளிக்கையில், இது மத்திய அரசின் திட்டம். மத்திய அரசு நேரிடையாக வங்கியில் பணத்தை செலுத்தி விடுகிறது என்றார். அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சி துணைதலைவர் துரைமுருகன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி செய்பவர்கள் ஏழை மக்கள். வயதானவர்கள் அவர்கள் எப்படி போய் பணத்தை வங்கியில் எடுப்பார்கள். அவர்களுக்கு நேரில் பணம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இவையெல்லாம் நாடாளுமன்றத்தில் நீங்கள் பேச வேண்டும். உங்களிடம் 38 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இங்கே இதனை பேசுவதை விடுத்து அங்கே உங்கள் எம்.பி.க்களை பேச சொல்லுங்கள். மத்திய அரசு சில வழிமுறைகளை சொல்லியிருக்கிறது. ஊதியத்தை நேரிடையாக வங்கியில் செலுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறது. எனவே அங்கு செலுத்தப்படுகிறது. எங்களிடம் கொடுத்து கொடுக்க சொன்னால், நேரிடையாக கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய சக்கரபாணி, எங்களது உறுப்பினர்கள் பார்லிமெண்டில் பேசியிருக்கிறார்கள் என்று கூறியபோது, மீண்டும் முதல்வர் குறுக்கிட்டு, நாங்கள் 38 எம்.பி.க்கள் முன்பு இருந்தபோது, என்ன செய்தீர்கள், என்ன செய்தீர்கள் என்று கேட்டீர்கள். இப்போது நீங்கள் பார்லிமெண்டில் 38 பேர் இருக்கிறீர்கள். ஏழை, எளிய மக்களின் பாதிப்பை எடுத்து சொல்லி அவர்களுக்காக வாதாடி பெற்று தாருங்கள். எனக்கு தெரிந்தவரை நீங்கள் பார்லிமெண்டில் பேசியதாக தெரியவில்லை என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.