கன்னியாகுமரி

கடனை திருப்பி செலுத்துவதில் தமிழக பெண்கள் இந்தியாவுக்கே முன்மாதிரியாக திகழ்கிறார்கள்- ந.தளவாய் சுந்தரம் பெருமிதம்

கன்னியாகுமரி:-

கடனை திருப்பி செலுத்துவதில் தமிழக பெண்கள் இந்தியாவுக்கே முன்மாதிரியாக திகழ்கிறார்கள் என்று தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் பெருமிதத்துடன் கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளமடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் உதவிகள் வழங்கும் விழா நேற்று சங்கத் தலைவர் எம்.டி.என்.ஷேக் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு 136 பயனாளிகளுக்கு ரூ1.43 கோடி கடன் உதவிகளை வழங்கி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெண்கள் நகர பகுதிகளுக்கு சென்று கடன்பெறுவதில் இருந்த சிரமங்களை குறைப்பதற்காகவும், பெண்கள் தங்களது வாழ்வில் சுயதொழில் புரிந்து முன்னேறுவதற்காகவும், அரசின் சார்பில் கிராமங்களில் இதுபோன்ற கூட்டுறவு கடன் சங்கங்களை ஏற்படுத்தியுள்ளார். இந்த சங்கங்களானது ஏழை, எளிய கிராமபுறத்தில் வசிக்கும் பெண்கள் விவசாயிகளுக்காகவே உருவாக்கப்பட்டது.

பெண்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காகவும், கூட்டுத்தொழில் செய்வதற்காகவும் சுயஉதவி குழுக்களை மாநிலம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் ஏற்படுத்தி பெண்களுக்கு பெருமை சேர்த்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். தமிழகம் முழுவதும் பெண்கள் அனைவரும் தாங்கள் வாங்கிய கடன்களை முறையாக செலுத்தியதால் இச்சங்கங்கள் அனைத்தும் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது.

பெண்கள் தாங்கள் பெற்ற கடனை முறையாக செலுத்துவதில் தமிழக பெண்கள் இந்தியாவிலேயே முதன்மையாக உள்ளார்கள். இச்சங்கங்களில் பெண்கள் விவசாயிகள், அடித்தட்டு மக்கள் உறுப்பினர்களாக உள்ளார்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இதுபோன்ற வசதிகள் கிடையாது. கிராமங்களில் உள்ள வங்கிகளில் உள்ள உறுப்பினர்கள் தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கிறார்கள்.

இதன்மூலம் வங்கிகளும் வளர்கிறது. புரட்சித்தலைவி அம்மாவின் கனவான கிராமபுற பெண்களின் வாழ்வாதாரமும் பெருகுகிறது. எனவே, பெண்கள் தாங்கள் பெறும் கடன் உதவிகளை முறையாக திரும்ப செலுத்துவதோடு மட்டுமல்லாமல் உங்களது வாழ்வாதாரத்தை பெருக்கி இதை ஏற்படுத்தி தந்த தமிழக அரசிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.

விழாவில் மாவட்ட ஆவின் பெருந்தலைவர் எஸ்.ஏ.அசோகன், அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் டி.ஜாண்தங்கம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ஜி.சுப்பையா, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் பா.சங்கரன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் எஸ்.கிருஷ்ணகுமார் மற்றும் வெள்ளமடம் கூட்டுறவு சங்க இயக்குநர், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.