சிறப்பு செய்திகள்

கடன்களை திருப்பி செலுத்துவதிலும் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது – துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதம்

தேனி:-

கடனை திருப்பி செலுத்துவதில் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதத்துடன் கூறினார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி அல்லிநகரம் நகராட்சியில் கூட்டுறவுத்துறையின் சார்பில் நடைபெற்ற அரசு விழாவில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் சார்பில் 1,597 பயனாளிகளுக்கு ரூ.20.53 கோடி மதிப்பிலான பல்வேறு கடனுதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கு.கோவிந்தராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கடனுதவிகளை வழங்கி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

ஒரு மகனை ஈன்று இந்த உலகிற்கு தருவது, தாயின் கடமை. அந்த பிள்ளையை, தக்க கல்வி தந்து சான்றோன் ஆக்குவது தந்தையின கடமை. அவன் தன் வீரத்தை வெளிப்படுத்த, வேல் முதலான கருவிகளை செய்து தருவது கொல்லர்களின் கடமை. நன்னெறிகளை நடைமுறைப்படுத்தி, ஆள வேண்டியது அரசின் கடமை. ஒளிருகின்ற வாளை, தன் கரம் பற்றி, களிறுகளை வெற்றி கொள்ள வேண்டியது காளைகளை போன்ற இளைஞர்களின் கடமை என்று ஒரு தாயாக இருந்து, தனக்கும். மற்றவர்களுக்கும் உள்ள கடமைகளை எடுத்து கூறுகிறார் புலவர் பொன்முடியார்.

கடன் என்னும் சொல் கால ஒட்டத்தில் கடமை என்னும் பொருளை உள்ளே வைத்தும், திருப்பித் தர வேண்டியது என்னும் அர்த்தத்தை வெளிப்படையாகவும் கொண்டு, பணம் கொடுத்தல் வாங்கலிலும், ரொக்க வரவு செலவுகளிலும் ஒரு முக்கிய இடத்தை பிடித்துக் கொண்டது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கடன் என்பது பணமோ, பொருளோ, தாங்கள் பெற்றதை பயன்படுத்தி, முன்னேற்றம் காண வேண்டிய பொறுப்புணர்வையும், மறுப்பு சொல்லாமல் திருப்பித் தந்திட வேண்டும் என்னும் கடமை உணர்வையும் தனக்குள் கொண்டிருக்கிறது.

இன்றைய உலகில் தங்கள் வாழ்க்கையில் கடன் வாங்காதவர்கள் யாரும் இல்லை என்றுதான் கூற வேண்டும். சிறு ஏழை முதல் பெரும் பணக்காரர் வரை தங்கள் தேவைகளுக்கு ஏற்ப பிறரிடமோ, வங்கிகளிடமோ கடன் வாங்குவதை நாம் கண்கூடாக கண்டு வருகிறோம். மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற உலக வங்கி மற்றும் பிற நிதி நிறுவன அமைப்புகளிடமிருந்து, மத்திய மாநில அரசுகளும் கடன் வாங்குகின்றன. இந்த உலகில் வாழுகின்ற, அனைவருமே ஏதாவது ஒரு வகையில் கடன்பட்டுத்தான் வாழ்க்கையை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

நமது வீட்டில் பெண்மணிகள் சர்க்கரை என்றும், காப்பி பொடி என்றும் அண்டை வீடுகளில் கடன் வாங்குதல், கொடுத்தல், மூலம் ஒரு அன்னியோன்னியத்தை ஏற்படுத்தி கொடுக்கிறார்கள். மற்றவர்களோ வீட்டுக்கடன், நகைக்கடன், வண்டிக்கடன், தனிக்கடன், சம்பளக்கடன் என்று வகை வகையான கடன்களை வாங்கி, தங்களது வாழ்வை வளப்படுத்தி கொண்டு வருகிறார்கள்.

மனிதர்கள், தங்கள் வாழ்வில் வளம்பெற கடன் வாங்கலாம் என்று பொருளியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். எடுத்துக்காட்டாக, ஒருவர் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று சொன்னால, அந்த வீட்டிற்கான முழு மதிப்பையும், சம்பாதித்த, மொத்தமாக சேர்த்து 20 வருடம் கழித்து வாங்குவது என்பது இயலாது. அதைவிட இன்று கடன் பெற்று அந்த வீட்டை வாங்கி 20 வருடங்களில் சிறுக, சிறுக அந்தக் கடனை அடைத்து வீட்டை உரிமையாக்கி கொள்வதுதான் அறிவார்ந்த செயல் என்று, பெருளாதார வலலுநர்கள் எடுத்துக் கூறுகிறார்கள்.

இதனை கருத்தில் கொண;டே இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அடித்தட்டு மக்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்குவதை பெரிதும் ஊக்குவித்தார். அம்மா அவர்களின் வழி நடக்கும் இந்த அரசு இன்று தேனி மாவட்டத்தில் 1,597 நபர்களக்கு ரூ.20 கோடிக்கு மேல் கடன் வழங்கி உள்ளது.

வாங்கிய கடன்களை திருப்பி செலுத்துவதில் தமிழகம் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக தலை நிமிர்ந்து நிற்கிறது. இந்த இலக்கணத்திற்கு உகந்த வகையில் கடனுதவிகள் பெறும் அனைவரும் தங்களது வாழ்க்கையை வளப்படுத்தி கொள்வதோடு, வாங்கிய கடனை முறையாக திரும்ப செலுத்தி தொடர்ந்து இதனினும் அதிக கடன் பெற்று அதன் மூலம் வாழ்க்கையை மேலும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் பிறரிடம் பெற்ற கடனை திரும்ப செலுத்துவது நமது அன்னை, தந்தையரால் நாம் வளர்க்கப்பட்ட முறையினையும், நேர்மையும் எடுத்துக் கூறும். நமது சுயமரியாதையை இந்த உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டும்.

வாழ்க்கையில் நேர்மையாளனாக வாழ்வது பெரிய விஷயம். அதே நேரத்தில் தவறுகள் செய்யக்கூடிய சந்தர்ப்பமும், வாய்ப்பும் வாய்த்தாலும் நேர்மையாக வாழ்வது அதனினும் பெரிய விஷயமாகும். வாழ்வில் ஒரு நாள் நேர்மையாக வாழ்ந்து பார்த்து அதன் ருசியை நாம் உணர்ந்து விட்டால் அதன் பின் நாம் எதற்காகவும் நேர்மையை இழக்க மாட்டோம். தவறும் செய்ய எண்ண மாட்டோம்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.