சிறப்பு செய்திகள்

கூட்டுறவு பண்டக சாலைகளை மேம்படுத்த ரூ.229 கோடி நிதி உதவி வழங்க வேண்டும் – மத்திய அரசிடம் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வேண்டுகோள்

புதுடெல்லி

தமிழக கூட்டுறவு பண்டகசாலைகளை மேம்படுத்தவும், கணினிமயமாக்கவும் ரூ.229 கோடி நிதி உதவி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் கூட்டுறவு பண்டகசாலைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்தவும், கணினிமயமாக்கும் பணிகளை மேற்கொள்ளவும், தேசிய கூட்டுறவு வளர்ச்சிக்கழகம் ரூ.229 கோடி நிதி உதவி வழங்கிட வேண்டும்.
புதுடெல்லியில் 20.12.2019 அன்று தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தின் “நுகர்வோர் கூட்டுறவுகள் மற்றும் மதிப்பு சங்கிலிகள்” பற்றிய கருத்தரங்கில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வேண்டுகோள் விடுத்தார்.
“நுகர்வோர் கூட்டுறவுகள் மற்றும் மதிப்பு சங்கிலிகள்” பற்றிய தலைப்பில் தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகம் (NCDC) சார்பில் புதுடெல்லியில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நுகர்வோர் கூட்டுறவுகள் மற்றும் மதிப்பு சங்கிலிகள் பற்றிய தேசிய கருத்தரங்கத்தினை தொடங்கி வைக்க எனக்கு வாய்ப்பளித்தமைக்கு, முதலமைச்சருக்கு, முதலில் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இக்கருத்தரங்கமானது, இப்போதைய காலகட்டத்தில் மிகத் தேவையான ஒன்று. ஏனெனில், மதிப்பு சங்கிலியானது வேளாண் விளைபொருட்களின் சந்தை விலையை அதிகரிக்கவும், வேளாண் விளைபொருட்களின் தரத்தை நிலைப்படுத்தவும், விவசாயிகளுக்கு அதிக வருவாயை ஈட்டவும், நுகர்வோருக்கு பெரும் பலனையும் தருவதோடு, வேலைவாய்ப்பினையும் உருவாக்கித் தர வல்லது.

முதலாவது நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலையானது, இங்கிலாந்து நாட்டில் ராக்டேல் என்னும் ஊரில் ராக்டேல் முன்னோடிகளால் 1844-ல் தொடங்கப்பட்டது. இந்தியாவில் கூட்டுறவுச் சங்கங்களை தொடங்குவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தமிழகத்தில், திருவள்ளூர் மாவட்டம், திரூர் கிராமத்தில் முதல் கூட்டுறவுக் கடன் சங்கமும், காஞ்சிபுரத்தில், நகர கூட்டுறவு வங்கியும், நுகர்வோர் தேவைகளை பூர்த்தி செய்ய, சென்னையில், திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கமும், 1904-ம் ஆண்டில் தொடங்கப்பட்டன.தமிழ்நாட்டில் நுகர்வோர் கூட்டுறவுகள் மாநில மாவட்ட மற்றும் தொடக்க நிலை என மூன்றடுக்கு அமைப்பில் செயல்படுகின்றன.

இப்பண்டகசாலைகள், சிறப்பங்காடிகள், சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள், சுயசேவைப் பிரிவுகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் என பன்முகத் தன்மையுடன் கட்டுப்பாடற்ற பொருட்களை நுகர்வோருக்கு விற்பனை செய்கின்றன.

மேலும், நியாயவிலைக் கடைகள், அம்மா மருந்தகங்கள், கூட்டுறவு மருந்தகங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்கள் மற்றும் மண்ணெண்ணெய் வழங்கு நிலையங்களை நடத்தி வருவதுடன் சமையல் எரிவாயு விநியோகஸ்தராகவும் செயல்பட்டு வருகின்றன.

இது தவிர வேளாண் விளைபொருட்களின் மதிப்பினை கூட்டுவதற்காக பதப்படுத்தும் அலகுகளையும் செயல்படுத்து கின்றன. 2019-2020 ஆண்டில் அக்டோபர் திங்கள் வரை கூட்டுறவு பண்டகசாலைகள் ரூ.892 கோடி மதிப்புள்ள கட்டுப்பாடற்ற பொருட்களையும் ரூ.1368 கோடி மதிப்புள்ள கட்டுப்பாட்டுப் பொருட்களையும் விற்பனை செய்துள்ளன. கூட்டுறவுப் பண்டகசாலைகளில் கொள்முதலை நெறிப்படுத்த கூட்டுக்கொள்முதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, நுகர்வோர் பயன்பெறும் வகையிலான ஏராளமான புதிய திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அவற்றில் சிறப்பான சிலவற்றை குறிப்பிடுகிறேன்.

கூட்டுறவு மற்றும் அம்மா மருந்தகம்:

வெளிச்சந்தையில் மருந்துகளின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், கூட்டுறவுத்துறையால் நடத்தப்படும், 288 கூட்டுறவு மற்றும் அம்மா மருந்தகங்கள் வாயிலாக அதிகபட்சமாக 20ரூ வரையிலான தள்ளுபடியில் நுகர்வோருக்கு மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. அக்டோபர் 2019 வரை ரூ.905 கோடி மதிப்புள்ள மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அம்மா பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட, கூட்டுறவின் வழியாக உழவருக்கும் நுகர்வோருக்கும் பயனளிக்கும் புதுமையான திட்டம்தான் அம்மா பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள். இத்திட்டத்தின் கீழ் பண்ணையில் அறுவடை செய்யப்பட்ட பசுமையான காய்கறிகள் உழவரின் விளைநிலத்திலேயே கொள்முதல் செய்யப்பட்டு, அவற்றிற்குரிய விலை உடனடியாக ரொக்கமாக அவர்களுக்கு தரப்படுகிறது.

இக்காய்கறிகள், நகரத்திற்கு கொண்டுவரப்பட்டு சந்தைவிலையை விட குறைவான விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுகின்றன.தமிழகத்தில் உள்ள, 3 நகரும் அம்மா பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் உட்பட 79 கடைகள் வாயிலாக, இது வரை காய்கறிகள் ரூ.150 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

சந்தை குறுக்கீட்டு நடவடிக்கை:

விவசாய விளைபொருட்களின் விலை, எப்போதெல்லாம் உயர்கிறதோ, அப்போதெல்லாம் அவற்றை கட்டுப்படுத்துவதில் கூட்டுறவுகள் கைகொடுக்கின்றன. இதற்காக, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நூறு கோடி ரூபாயை மூலதன நிதியாக வழங்கி விலை கட்டுப்பாட்டு நிதியினை உருவாக்கினார்கள்.

தமிழ்நாட்டில் அரிசியின் விலை உயர்ந்தபோது, மேற்கு வங்காளத்திலிருந்து, 1000 மெட்ரிக் டன் மினிகிட் அரிசியும், வெளிச்சந்தையிலிருந்து 7775 மெட்ரிக் டன் அரிசியும் கொள்முதல் செய்யப்பட்டு, நமது கூட்டுறவு சில்லறை விற்பனை மையங்கள் மூலம், முறையே கிலோ ஒன்றுக்கு 25 ரூபாய்க்கும், 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிதியிலிருந்து, சந்தையில், துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, புளி, மிளகாய் போன்றவற்றின் விலை உயர்ந்தபோதெல்லாம், விலைக் கட்டுப்பாட்டு நிதியுதவியுடன் கூட்டுறவுகள் சந்தை விலையைவிட பொருட்களை குறைவான விலைக்கு விற்பனை செய்து விலைஉயர்வை கட்டுப்படுத்தின. விலைக் கட்டுப்பாட்டு நிதியிலிருந்து இக்காரணத்திற்காக ரூ.56 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

வெங்காய விலை கட்டுப்படுத்துதல்:

தற்போது ஏற்பட்டுள்ள வெங்காய விலை உயர்வினை கட்டுப்படுத்த விலைக் கட்டுப்பாட்டு நிதி உதவியுடன் கிலோ 40 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 174 மெட்ரிக் டன் அளவிலான வெங்காயம் குறைவான விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டு, சந்தைக்குறுக்கீட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொது விநியோகத் திட்டம்

அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டத்தினை இந்தியாவிலேயே செயல்படுத்தும் ஒரே மாநிலம் தமிழ்நாடு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இச் சிறப்பான சமூகநலத்திட்டத்தில் 2,05,70,702 குடும்ப அட்டைதாரர்களுக்கு 34,773 நியாய விலைக்கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில், கூட்டுறவுத்துறையின் 32,946 நியாய விலைக்கடைகள் மூலம் 1,84,87,662 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

பசித்த மனிதனுக்கு உணவளிப்பது கடவுளுக்கு தொண்டு செய்வதற்கு ஒப்பாகும். ஒரு தாயின் நிலையில் இருந்து புரட்சித்தலைவி அம்மா அவர்கள், மக்களின் தேவையறிந்து, பொதுவிநியோகத்திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு, விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தினை 2011 ஆண்டில் தொடங்கி வைத்தார்கள். இதன் மூலம் 1,76,09,356 குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும், 2,62,129 மெட்ரிக் டன் விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. தற்போதும், முதலமைச்சர் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதேபோல், 18,61,297 அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும், 69,964 மெட்ரிக் டன் விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது.மேலும் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை நியாயவிலைக் கடைகளில் மானிய விலையிலும், ஊட்டி டீ தூள், அம்மா அயோடின் உப்பு போன்றவை நியாயமான விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும், எளிதில் அணுக இயலாத, மலைப்பகுதிகளில் வசிக்கும், மக்களுக்கு சேவை செய்யும்பொருட்டு, 46 நகரும் நியாயவிலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 283 மலைக் கிராமங்களில் வசிக்கும் 48,471 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுகின்றனர்.

அது மட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசு கூட்டுறவு பண்டகசாலைகளில் புதிய கட்டடங்கள், சுய சேவை பிரிவுகள் கட்டுவது, நவீனமயமாக்குதல் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள நிதி வசதி அளிக்கிறது. அரசின் இவ்வுதவியால் கூட்டுறவுத்துறை, தனியார் துறைக்கு இணையாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தனியார் துறைகளிலிருந்து ஏற்படும் கடுமையான போட்டிகளுக்கு இடையேயும், தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு பண்டகசாலைகள் சிறப்பாக செயல்படுகின்றன எனில், அதற்கு தமிழ்நாடு அரசு வழங்கி வரும் நிலையான ஆதரவும், உதவிகளுமே காரணம்.இதன்காரணமாக, தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு சங்கங்கள், புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியில் 2011 முதல் இதுவரை தேசிய அளவில் 28 பரிசுகளை பெற்றுள்ளன.

முதலமைச்சரின் சிறப்பான வழிகாட்டுதலால், கடந்த நவம்பர் மாதம் இறுதி வாரத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகமான கடன்கள் வழங்கியமைக்காக, தமிழ்நாடு மாநிலத்தலைமைக் கூட்டுறவு வங்கிக்கு, “சிறப்பாக செயல்பட்டமை”க்கான விருதினை குடியரசுத் துணைத்தலைவரிடமிருந்து பெற்றேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதேபோல, அம்மா அவர்களது சீர்மிகு வழிகாட்டுதலின் காரணமாக, இதே விருதினை 2014-ம் ஆண்டில், மேதகு குடியரசுத்தலைவர் அவர்களிடமிருந்து பெற்றுள்ளேன் என்று குறிப்பிட விரும்புகிறேன்.

தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகளின் நிதிநிலைமையினை மேம்படுத்த ஏதுவாக 23 கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகளுக்கு ரூ.115 கோடி நிதியுதவியினையும் இதனை 5 ஆண்டுகள் கழித்து 10 ஆண்டுகளில் திரும்ப செலுத்தும் வகையில் வழங்கிட தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தினை கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோன்று 128 தொடக்க கூட்டுறவுப் பண்டக சாலைகளை மேம்படுத்திடவும், 5 ஆண்டுகள் கழித்து 10 ஆண்டுகளில் கடனை திரும்ப செலுத்திடும் வகையில் ரூ.64 கோடி வழங்கிட வேண்டும் என்றும் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தை கேட்டுக்கொள்கிறேன்.

குளிர்காலப் பயிர்கள் ஊட்டியிலும், வறண்ட பகுதியில் பயிரிடப்படும் பயிர்கள் இராமநாதபுரத்திலும் பயிரிடப்படுகிறது, அது மட்டுமல்லாமல் போதுமான அளவு காய்கறிகள், பழங்கள், மசாலா பொருட்கள், நறுமணப்பொருட்களையும் தமிழகம் பயிரிடுகிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே, தமிழகத்தில் விளைவிக்கப்படும் வேளாண் விளைபொருட்களுக்கு, வேளாண்மை மதிப்புச் சங்கிலியினை அமைக்க ஒரு வல்லுநர் குழுவினை அமைத்து அறிக்கை பெற்று வேளாண் மதிப்புச் சங்கிலியினை கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் அமைத்து அதற்கான நிதியுதவியும் அளித்தால் தமிழக அரசு இணைந்து செயல்பட தயாராக உள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கூட்டுறவுப் பண்டகசாலைகளைக் கணினிமயமாக்குவதால், மேலாண்மை தகவல் அமைப்பினை அமைக்க வழிவகுக்கும். அனைத்து மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகளும் தமிழக அரசால் கணினிமயமாக்கப் பட்டுள்ளன.இத்தருணத்தில், 370 தொடக்க கூட்டுறவு சங்கங்களை கணினி மயமாக்க ரூ.50 கோடி நிதியுதவியினை வழங்கிட தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகத்தினை கேட்டுக்கொள்கிறேன்.

ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சித்திட்டம்

தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழக நிதியிலிருந்து ரூ.473.35 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.தற்போது மேலும் 9 மாவட்டங்களில் இரண்டாம் கட்டமாக இப்பணிகள் மேற்கொள்ள திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதுடன், கூட்டுறவு நிறுவனங்களின் செயல் மூலதனமும் உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் புதியதாக 5 மாவட்டங்கள் தற்போது உருவாக்கப் பட்டுள்ளன. இம்மாவட்டங்களில் ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சித் திட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய கூட்டுறவு வளர்ச்சிக்கழகத்தை நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.இதுவரை நான் குறிப்பிட்டவை எல்லாம் தமிழ்நாட்டில் நுகர்வோர் கூட்டுறவுகளைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு மட்டுமே ஆகும்.

இத்தருணத்தில், இத்தேசிய கருத்தரங்கத்தின் ஆலோசனைகளை தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் நடைமுறைப் படுத்தும் என்று தெரிவித்துக்கொள்வதோடு, நுகர்வோர் கூட்டுறவுகளில் மதிப்பு சங்கிலிகள் அமைக்கும் பணியை செயல்படுத்த தேசியக் கூட்டுறவு வளர்ச்சிக்கழகத்தோடு இணைந்துசெயல்படுத்திட தமிழகத்திலுள்ள நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் தயாராக உள்ளன என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நுகர்வோர் கூட்டுறவுகள் மற்றும் மதிப்பு சங்கிலிகள் பற்றிய இத்தேசிய கருத்தரங்கம் பெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன். இந்த தேசிய கருத்தரங்கினை தொடங்கி வைக்க எனக்கு வாய்ப்பு அளித்த தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகத்தின் மேலாண்மை இயக்குநருக்கும் பங்கேற்ற அனைத்து கூட்டுறவாளர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

இக்கருத்தரங்கில் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் சந்தீப்குமார் நாயக், தேசிய அளவிலான கூட்டுறவாளர்கள் மற்றும் கூட்டுறவுத்துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.