சிறப்பு செய்திகள்

சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் – துணை முதலமைச்சர் 6 நாள் சூறாவளி பிரச்சாரம்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரு தொகுதிகளிலும் வரும் 13-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 6 நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு கழக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளுக்கும் வரும் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 24-ந்தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கி அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இடைத்தேர்தலையொட்டி கழகத்தின் சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் தேர்தல் பணியாற்றி வருகிறார்கள்.

இதற்கிடையே கழக வேட்பாளர்கள் இருவரும் தொகுதி முழுவதும் கிராமம் கிராமாக சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். இந்நிலையில் கழக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் பொருட்டு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இரு தொகுதிகளிலும் 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். முதலில் நாங்குநேரியிலும், பின்னர் விக்கிரவாண்டியிலும், அதைத்தொடர்ந்து கடைசி இரு நாட்கள் இரு தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

அதேபோல் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வரும் 13-ந்தேதி தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். 13, 14, 17 ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதியில் கிராமம் கிராமமாக சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

பின்னர் 15, 16, 18 ஆகிய தேதிகளில் நாங்குநேரி தொகுதிக்கு சென்று அங்கு பல்வேறு இடங்களில் கழக வேட்பாளரை ஆதரதித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.