சென்னை

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் – என்.ஆர்.தனபாலன் வேண்டுகோள்

சென்னை

கொரோனா வைரஸ் பரவுவதைதடுக்க தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொடிய வகை வைரசான கொரோனாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கைகள் எடுத்து வந்த போதிலும் பொதுமக்களும் அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இந்தியாவில் பேரிடராக மத்திய அரசு அறிவித்து அதற்கேற்றாற்போல் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை தேவையான அறிவுரைகளையும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் மாநில சுகாதாரத்துறைக்கு அறிவித்து வருகிறது. அதன் அடிப்படையில் தமிழக அரசு வேகமாக செயல்பட்டு வருகிறது.

தமிழக அரசு கொரோனா பரவுவதை தடுக்க தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து பொதுமக்கள் அதிகமாக கூடுகிற வணிக வளாகம், சினிமா தியேட்டர்கள், விளையாட்டு அரங்குகள், ஜிம், நீச்சல் குளம், பொதுக்கூட்டம், கண்காட்சி, மாநாடு, மதுபான பார்கள் போன்றவைகளுக்கு தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது. இதனை பொதுமக்கள் சிரமமாக எண்ணாமல் நமது பாதுகாப்பு நடவடிக்கையாக கருதி அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு என்.ஆர்.தனபாலன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.