திருச்சி

லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் ரகசிய இடத்தில் வைத்து 14 பேரிடம் விசாரணை!

திருச்சி

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடை கொள்ளை வழக்கில் மூளையாகச் செயல்பட்ட முருகன் மற்றும் சுரேஷின் உறவினர்கள் 14 பேரைப் பிடித்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில், கடந்த 2ஆம் தேதி அதிகாலை கொள்ளை நடந்தது. கடைச் சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் 13 கோடி ரூபாய் மதிப்பிலான 28 கிலோ தங்க நகைகளை அள்ளிச் சென்றனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. விசாரணையில், லலிதா ஜூவல்லரியில் கைவரிசை காட்டியது திருவாரூரைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகன் என்பது அம்பலமானது. முருகனின் கூட்டாளியான மணிகண்டன் அண்மையில் திருவாரூர் மாவட்டம் விளமல் என்ற இடத்தில் வாகனச் சோதனையின் போது கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து நான்கரை கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மணிகண்டனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற சீராத்தோப்பைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தப்பி ஓடினார்.

கொள்ளையில் தொடர்புடைய சுரேஷின் தாயார் கனகவல்லியை போலீசார் கைது செய்தனர். மணிகண்டனும், கனகவல்லியும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், முருகன், சுரேஷ், ஆகியோரின் உறவினர்கள் 14 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் லலிதா ஜூவல்லரி கொள்ளை சம்பவத்தில் 6 பேர் வரை ஈடுபட்ட தகவலும், அவர்கள் வெளி மாநிலங்களுக்கு தப்பி ஓடிவிட்ட தகவலும் தெரிய வந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

கொள்ளை போன 28 கிலோ தங்கத்தில் தற்போது வரை நான்கரை கிலோ தங்கம் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், மீதமுள்ள நகைகள் எங்கே என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் ஓரிரு தினங்களில் கொள்ளையர்களை பிடித்து விடுவோம் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கொள்ளையர்களைத் தேடி கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்கு தனிப்படைகள் விரைந்துள்ளன.