தற்போதைய செய்திகள்

ஈழத் தமிழர்கள் நாடு திரும்ப விரும்பினால் வேண்டிய உதவியை அரசு செய்து கொடுக்கும் – அமைச்சர் க.பாண்டியராஜன் பேட்டி

திருவள்ளூர்

ஈழத் தமிழர்கள் நாடு திரும்ப விரும்பினால் வேண்டிய உதவிகளை அரசு செய்து கொடுக்கும் என்று அமைச்சர் க.பாண்டியராஜன் கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருநின்றவூர் நடுகுத்தகை பகுதியில் மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் கழக வேடப்பாளர்களை ஆதரித்து தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதன் பின்னர் அமைச்சர் க.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கொள்கை முடிவின் அடிப்படையிலே கழகம் ஆதரித்து வாக்களித்து. யாருடைய நிர்ப்பந்தமும் இல்லை. இதன் மூலம் இந்திய குடிமக்கள் யாரும், எந்த மதத்தவரும் பாதிப்படைய மாட்டார்கள். இலங்கை தமிழர்கள் இங்கேயே இருப்பது எங்கள் நோக்கம் அல்ல. அவர்கள் தங்களது சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஈழத் தமிழர்கள் சொந்த நாட்டிற்கு செல்ல விரும்பினால் வேண்டிய அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்கும்.

இவ்வாறு அமைச்சர் க.பாண்டியராஜன் கூறினார்.

பிரச்சாரத்தின்போது ஒன்றிய செயலாளர் காட்டுப்பாக்கம் திருநாவுக்கரசு, ஆவடி நகர செயலாளர் ஆர்.சீ.தீனதயாளன்
உட்பட ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்று உடன் சென்றனர்.