தற்போதைய செய்திகள்

நடப்பாண்டில் 7,200 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் துவக்கம் – பேரவையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

சென்னை

நடப்பாண்டில் 7,200 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும் என்று பேரவையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது மன்னார்குடி உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, மன்னார்குடி தொகுதிக்குட்பட்ட வடபாதியில் உள்ள நடுநிலைப்பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த அரசு ஆவன செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளை வடபாதியில் உள்ள நடுநிலைப்பள்ளி நிறைவு செய்யாததால், அந்த பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வழிவகை இல்லை. மேலும் உறுப்பினர் நீடாமங்கலம் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

அங்கு உடனடியாக சுற்றுசுவர் அமைத்து தர நிதி ஒதுக்கப்படும்.மேலும் தனது தொகுதியில் ஸ்மார்ட் வகுப்புகளை தொடங்க வேண்டும் என உறுப்பினர் கோரியுள்ளார். இந்த ஆண்டு 7,200 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்பட உள்ளது. அதில் மன்னார்குடி தொகுதியிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைத்து தரப்படும் என்று பதில் அளித்தார்.