தற்போதைய செய்திகள்

புதுவையில் ஆட்சி மாற்றத்தையே மக்கள் விரும்புகிறார்கள் – என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பேட்டி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பேட்டி

புதுச்சேரி

தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைகூட புதுச்சேரி காங்கிரஸ் அரசு நிறைவேற்றவில்லை. எனவே ஆட்சி மாற்றத்தையே மக்கள் விரும்புகின்றனர் என்று என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கூறினார்.

புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கழக கூட்டணி சார்பில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனா (எ) புவனேஸ்வரனை ஆதரித்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி நேற்று ஞானப்பிரகாசம் நகரில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்தின்போது என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நாங்கள் ஆட்சியில் இருந்தபோது தற்போது ஆட்சியாளர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளதோ, அதே அதிகாரம்தான் இருந்தது. அதைக்கொண்டுதான் மக்களுக்கான திட்டங்களை செய்தோம். ஆட்சியின் கடைசி நேரத்தில் கூட மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக இலவச மிக்சி, கிரைண்டர் திட்டத்தை நிறைவேற்றினோம்.

கல்வி உதவித்தொகையை ஆண்டுதோறும் ஒழுங்காக கொடுத்தோம். அதனால் தற்போதைய பிரச்சாரத்தில் கூட சிலர் உங்களால்தான் எங்கள் பிள்ளை மருத்துவர் ஆகியிருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர். வீடு கட்ட திட்டத்தை நிறைவேற்றினோம். இந்த ஆட்சியில் என்ன திட்டங்களை செய்துள்ளீர்கள்? புதிய திட்டங்கள் என்ன கொண்டு வந்தீர்கள்? தேர்தல் வாக்குறுதி ஒன்றாவது நிறைவேற்றினீர்களா? வாக்குறுதிகள் ஒன்றையும் செயல்டுத்தாத அரசுதான் இது.

சட்டமன்றத்தில்கூட மக்களை சந்திக்காத முதல்வர்தான் தற்போது உள்ளார். எங்கும் ஆளும் கட்சியைத்தான் எதிர்க்கட்சிகள் குறை சொல்ல வேண்டும். ஆனால் இங்கு ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சிகளை குறை கூறி காலத்தை ஓட்டி வருகின்றனர். சட்டமன்றத்தில் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறிய குற்றச்சாட்டுகளில் ஒன்றிற்காவது பதில் கூறியிருப்பார்களா?

மக்களைப்பற்றி சிந்தித்து, மக்களுக்கான திட்டங்களை செய்வதுதான் ஆட்சியாளர்களின் வேலை. அதை இந்த ஆட்சியாளர்கள் செய்யவில்லை. இதனால் இந்த ஆட்சி எப்போது மாறும் என்பது மக்களின் எண்ணமாக உள்ளது. ஆளும் கட்சி மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்யாமல், எதிர்க்கட்சிகள் மீது குறை கூறுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். தேர்தல் வந்தால் மக்களை சந்திப்பதுதான் கட்சி தலைவர்களின் வேலை. அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். மேலும் நாங்கள் அனைத்து நேரத்திலும், எல்லா இடங்களிலும் மக்களை நேரடியாக சந்தித்துத்தான் வருகிறோம். மக்கள் கூறும் குறைகளையும், அரசுத்துறைகளிடம் பேசி ஆட்சியாளர்கள் செய்ய வேண்டியதை நாங்கள் செய்து வருகின்றோம்.

இவ்வாறு ரங்கசாமி கூறினார்.