தற்போதைய செய்திகள்

மருத்துவர்கள் பரிந்துரையின்றி மருந்துகளை உட்கொள்ள வேண்டாம் – சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

சென்னை

மருத்துவர்கள் பரிந்துரையின்றி எந்த மருந்துகளையும் உட்கொள்ள வேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் காய்ச்சல் வார்டுகள், ரத்த பரிசோதனை மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார்.

பின்னர் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

முதலமைச்சர் ஆணைக்கிணங்க போர்க்கால அடிப்படையில் தமிழகம் முழுவதும் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைகளில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை மருத்துவர்களிடம் கேட்றிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் அனைத்து வகையான காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள், ரத்த தட்டணுக்கள், ரத்தக்கூறுகள் மற்றும் ரத்த பரிசோதனை கருவி ஆகியவை போதிய அளவில் அனைத்து அரசு மருத்துவமனைகளில் இருக்கின்றன.

டெங்கு காய்ச்சலால் எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படக்கூடாது என்ற வகையில் தமிழக அரசு மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக வடசென்னையில் பாதிப்பு அதிகமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. அந்த பகுதியில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். மேலும் காய்ச்சலினால் எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படக்கூடாது என்ற வகையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் காய்ச்சல் பிரிவு, காய்ச்சல் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் காய்ச்சலுக்கு பின் கவனிப்பு பிரிவு ஆகிய பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் காய்ச்சலுக்கான அறிகுறிகள் கண்டவுடன், அரசு மருத்துவ நிலையங்களை அணுகுமாறும், மருத்துவரின் பரிந்துரையின்றி எந்த மருந்தையும் அவர்களாகவே உட்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தனியார் மருத்துவர்களுக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் காய்ச்சல் மேலாண்மைக் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மருந்துக்கடைகளில் பொதுமக்களுக்கு உரிய பரிந்துரையின்றி மருந்துகள் வழங்கக் கூடாது என்று மருந்து கட்டுப்பாட்டு துறை இயக்குநரகம் மூலமாக அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்திய மருத்துவ முறை பாரம்பரிய மருந்களான நிலவேம்பு குடிநீர் அரசு மருத்துவமனை மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வழங்கப்பட்டு, இயற்கையான காய்ச்சல் குணமடைய ஊக்குவிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வுகளின் போது இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை இயக்குநர் கணேஷ், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் செந்தில்ராஜ், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி, அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வர் வசந்தாமணி மற்றும் மருத்துவத் துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.