சிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்

நாங்குநேரியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவோம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி

திருநெல்வேலி

நாங்குநேரி தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றி காட்டுவோம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

நாங்குநேரி தொகுதி கழக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெப.நாராயணை ஆதரித்து பாளையங்கோட்டை ஒன்றியம் அரியங்குளம், கீழநத்தம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், கே.மாணிக்கம், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தவசி, மாவட்ட துணை செயலாளர் ஐயப்பன், மாவட்ட இலக்கிய செயலாளர் திருப்பதி, ஒன்றிய கழக செயலாளர் செல்லப்பாண்டி, ரவிச்சந்திரன், பிச்சை ராஜன், அன்பழகன், மகாலிங்கம், ராமசாமி, நகர செயலாளர் விஜயன், அரியகுளம் கீழநத்தம் ஊராட்சி பகுதி சார்ந்த நிர்வாகிகள் செல்வராஜ், நாராயணன், சீனிமுகம்மது, முத்துவேலன், கணபதிசுந்தரம் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.

பிரச்சாரத்தின்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

தமிழக பெண்கள் புரட்சித்தலைவி அம்மா மீது அலாதியான பற்று கொண்டவர்கள். அம்மா அவர்கள் கொண்டு வந்த அனைத்து கனவு திட்டங்களையும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பாக நிறைவேற்றி வருகிறது. எதிர்க்கட்சிகளின் அனைத்து அவதூறு பேச்சுகளையும் புறம் தள்ளி விட்டு பாட்டாளி மக்களின் தோழனாக முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது நாங்குநேரி தொகுதி மக்கள் ஐந்து ஆண்டுகள் பணி செய்வதற்காக வசந்தகுமாரை தேர்ந்தெடுத்தனர். ஆனால் அவர் நாங்குநேரி மக்கள் மீது சிறிதும் அக்கறை இல்லாமல் தனது சுய நலத்திற்காக எம்.பி.யாக வேண்டும் என்ற பதவி ஆசையோடு இத்தொகுதி மக்களை நடுத்தெருவில் விட்டு விட்டு வேறு தொகுதியில் ேபாய் மக்களவை உறுப்பினராகி விட்டார். எனவே அவரது கட்சியை சேர்ந்த வேட்பாளரை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

சாதாரண ஏழை தொண்டரான கழக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனுக்கு வாக்களித்து வெற்றியை பரிசளிக்க வேண்டும். இத்தொகுதி மண்ணின் மைந்தரான வெ.நாராயணன் மக்களுக்காக எந்த நேரமும் செயல்படக் கூடியவர். தொகுதியிலேயே தங்கியிருந்து கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து மக்களுக்கு உதவி செய்யக்கூடியவர். அவர் வெற்றி பெற்றால் தான் நாங்குநேரி தொகுதி நாட்டின் முன்மாதிரி தொகுதியாக திகழும். எனவே அவரை வெற்றி பெற செய்வது இத்தொகுதி மக்களின் கடமையாகும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.