தற்போதைய செய்திகள்

திமிரின் மொத்த உருவம் ஸ்டாலின் – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கடும் தாக்கு

திருநெல்வேலி:-

திமிரின் மொத்த உருவம் ஸ்டாலின் என்று அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார்.

நாங்குநேரி தொகுதி கழக வேட்பாளருக்கு ஆதரவாக பாளை கே.டி.சி நகர் வடக்கு பகுதியில் பூத் நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பூத் பொறுப்பாளரான வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

கழக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் மக்களோடு மக்களாக பழகக் கூடியவர். சாமானிய தொண்டன். மக்களுக்காக திட்டங்களை பெற்றுத் தரக் கூடியவர். மக்களுடன் லைவ்வில் இருப்பவர். எனவே அவருக்கு லைப் கொடுக்க முடிவு செய்து விட்டனர். 5 ஆண்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அடிப்படையிலேயே வசந்தகுமாருக்கு மக்கள் ஓட்டு போட்டனர். ஆனால் எம்.பி., பதவிக்காக ஓட்டுப்போட்ட மக்களை மதிக்காமல் பதவியை வசந்தகுமார் ராஜினாமா செய்து விட்டார். அதனால் தான் இப்போது தேர்தலே நடக்கிறது. நம்பிக்கையை வசந்தகுமார் சிதைத்துவிட்டார் என ஓட்டு கேட்க செல்லும் போது மக்கள் கூறுகின்றனர். எனவே இந்த தேர்தலில் காங்கிரசுக்கு ஓட்டுப் போட மக்கள் தயாராக இல்லை.

கழக வேட்பாளர் நாராயணன் வெற்றி பெற்றால் மக்களுக்கு பல வளர்ச்சி திட்டங்கள், நன்மைகள் கிடைக்கும் என்பதையும் தொகுதி முழுவதும் வீடு வீடாக மக்களிடம் எடுத்துச் சொல்லி ஓட்டு சேகரிக்க வேண்டும். குறைந்த பட்சம் 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்திலாவது நாராயணன் வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பசேினார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:- 

திமிரின் மொத்த உருவமாக திமுக தலைவர் ஸ்டாலின் செயல்படுகிறார். முதல்வரையும், துணை முதல்வரையும் எப்போதும் குறை சொல்லும் ஸ்டாலின் என்ன வானத்தில் இருந்து குதித்தவரா? திமுக தலைவராக இருக்க ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது. கட்சியில் தகுதி படைத்த மூத்தவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு, தனது மகனுக்கு இளைஞர் அணி செயலாளர் பதவியை ஸ்டாலின் கொடுத்துள்ளார்.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.