தற்போதைய செய்திகள்

சரித்திர சாதனைகள் தொடர்ந்திட இரட்டை இலைக்கு வாக்களிப்பீர் – வாக்காளர்களுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வேண்டுகோள்

திருநெல்வேலி

கழக ஆட்சியில் தமிழகத்தில் மின்வெட்டு, ஜாதி கலவரம், கந்துவட்டி கொடுமை கிடையாது. இதுபோன்ற சரித்திர சாதனைகள் தொடர்ந்திட இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிப்பீர் என்று வாக்காளர்களுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனை ஆதரித்து விருதுநகர் மாவட்ட கழக செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி களக்காடு ஒன்றியம் தெற்கு மீனவன்குளம், வடக்கு மீனவன்குளம், கீழகள்ளிகுளம், கீழதுவரைகுளம், மேலதுவரைகுளம், கீழசிதம்பராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த இயக்கத்தை மக்கள் போற்றும் மகத்தான இயக்கமாக வழிநடத்தி வருகிறார்கள். அனைத்து ரேசன் கார்டுதாரா்களுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கிய அரசு கழக அரசு தான். ஏழை, எளிய மக்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. அரசின் நலத்திட்ட உதவிகள் வீடு தேடி வரும் காலம் இது.

எனவே மக்கள் இந்த அரசு மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் ஆட்சி நடக்கிறது. ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் புரட்சித்தலைவி அம்மா வழியில் முதல்வர் எடப்பாடியார் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை அறிவித்து நிறைவேற்றி வருகிறார். எல்லா சமுதாய மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆட்சியாக எடப்பாடியார் ஆட்சி திகழ்கிறது. கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் கழக ஆட்சிக்கு அதிகமான ஆதரவு உள்ளது.

திமுக ஆட்சியில் நடைபெற்ற ஜாதி கலவரங்கள், மின்வெட்டு, கட்டபஞ்சாயத்து, நில அபகரிப்பு, அரசியல் படுகொலைகள் தமிழக மக்கள் மனதில் இன்றும் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டுதான் இருக்கிறது. எடப்பாடியார் ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து கிடையாது, மின்வெட்டு கிடையாது, ஜாதி கலவரம் கிடையாது, சட்டம் ஒழுங்கு பிரச்சினை கிடையாது, கந்து வட்டி கொடுமை கிடையாது, நில அபகரிப்பு கிடையாது அனைத்து மக்களும் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். சட்டம்-ஒழுங்கு அமைதியாக உள்ளது. இந்த ஆட்சியை தமிழக மக்கள் விரும்புகின்றனர். கழகம் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கும். எடப்பாடியார் தொடர்ந்து தமிழக முதல்வராக நீடிப்பார். கழக ஆட்சியை கலைக்கவே முடியாது என்று மு.க.ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும். இருந்தபோதிலும் ஒரு நப்பாசையில் அவநம்பிக்கையில் மீண்டும் மீண்டும் முயற்சி எடுத்து வருகிறார்.

திமுகவை ஒரு காலமும் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இன்று தமிழகத்தில் மின்வெட்டே கிடையாது என்ற நிலைமைக்கு உயர்த்தி காண்பித்தவர் அம்மா வழிவந்த எடப்பாடியார். 2006 முதல் 2010 வரை நடைபெற்ற திமுக ஆட்சியின் அராஜகங்களை அட்டூழியங்களை தமிழக மக்கள் என்றும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள்.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கழக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் வெற்றி பெற்றார் என்ற வெற்றி செய்தி முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் கிடைக்க வேண்டும். நாங்குநேரி தொகுதியில் கழக ஆட்சியில் தான் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் செய்யப்பட்டன. அம்மா ஆட்சி காலத்தில்தான் வடக்கு பச்சையாறு நிர்த்தேக்கம் கட்டப்பட்டது. எடப்பாடியார் ஆட்சியில் வடக்கு பச்சையாறு நிர்த்தேக்க தொட்டியில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பெருந்தலைவர் காமராஜர், எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் புதிய அணைகளை கட்டி பாதுகாத்தார்கள். தற்போது எடப்பாடியார் ஆட்சியில் குடிமராமத்து பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. குடிமராமத்து பணியின் நாயகனாக எடப்பாடியார் திகழ்கிறார். வாக்காளர்கள் இந்த ஆட்சி தொடர்ந்திட சரித்திர சாதனைகள் தொடர்ந்திட இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.

பிரச்சாரத்தின்போது சாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன், களக்காடு ஒன்றிய செயலாளர் ஜெயராமன், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் பாபு மற்றும் கிளை செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர்.