தற்போதைய செய்திகள்

அம்மா பிறந்தநாளில் 1 லட்சம் கழகத் தொண்டர்கள் பச்சை மையில் கையெழுத்திடுவார்கள் – வைகைச்செல்வன் உறுதி

கடலூர்

கடலூர் மத்திய மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும், கழக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர், கழக செய்தித் தொடர்பாளர் டாக்டர் வைகைச்செல்வன் கலந்து கொண்டு பேசியதாவது:-

2016 ல் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு அளிக்கும் சட்டதிருத்த மசோதா, 14 வது சட்டசபைக் கூட்டத் தொடரில் நிறைவேற்றினார்கள். இந்த அறிவிப்பு தமிழகத்தில் பெண்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பெண்களின் வாழ்வில் முன்னேற்றம் அடையும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தின் மூலம், கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில், மக்களால் தேர்வு செய்யப்படும் பதவிகளில், பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கப்பட்டு, அதன்படி ஊரக உள்ளாட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு களம் காண்கின்றனர்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழி வந்த கழக அரசில் கட்டுப்பாடு, ஆட்சியில் நேர்மை, மக்களிடத்தில் அன்பும், கனிவும், கடமையுணர்வும் கொண்டு செயல்படுதல் என்ற தூய பண்பாடுகளைக் கண்டிப்பாக கடைப்பிடித்து மக்கள் பணி செய்து வரும் அரசாக அம்மா அவர்களின் கழக அரசு திகழ்கிறது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், விக்கிரவாண்டி, நாங்குநேரியில் ஈட்டிய இமாலய வெற்றியானது, வர இருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும், அதைத் தொடர்ந்து 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டம் என்பது தெளிவாகப் புரிந்து விட்ட நிலையில், தி.மு.க தோல்வி பயத்தில் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், வார்டு வரையறை, இட ஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்சனைகளைக் காரணம் காட்டி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணைக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இவ்வழக்கின் மீதான விசாரணையில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், ஊராட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் தேர்தலை நடத்தலாம் எனவும், ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்து தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பாணையின்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் எனவும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அளித்திருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சித்தேர்தலை உடனடியாக நடத்துவோம் என மக்களை ஏமாற்றுவதற்கு பல்வேறு தகிடுதத்தங்களை செய்தும் எதுவும் பலிக்கவில்லை. தற்போது உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தி.மு.க.வுக்கு பலத்த அடி கிடைக்கும் என்பதை உணர்ந்து தேர்தலை சந்திப்பதற்கு அஞ்சி நடுங்குகிறது. தி.மு.க.வினரின் நாடகங்களை உணர்ந்துதான் உச்சநீதிமன்றம், புதிய மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என்று ஆணை பிறப்பித்திருக்கிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில், தமிழக முதல்வர் அண்ணன் எடப்பாடியார் மற்றும் துணை முதல்வர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் இரு கரங்களின் துணையோடு, தமிழக மக்களின் நலன்களுக்காக எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருவதன் வாயிலாக, நடைபெற இருக்கின்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களும் அமோக வெற்றியைப் பெற்று, வருகிற பிப்ரவரி 24, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளில் 1 லட்சம் கழக வேட்பாளர்கள் பச்சை மையில் கையெழுத்திடுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், கழக அமைப்புச் செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன், கழக எம்.ஜி.ஆர் அணி துணைச் செயலாளர் இன்பராஜ் அவர்கள், கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் பிரசன்னாஅழகர்சாமி, பா.ம.க துணைச் செயலாளர் முத்துக்கிருஷ்ணன், தே.மு.தி.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவக்கொழுந்து, கழக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.