தற்போதைய செய்திகள்

வன்னியர்களுக்கு துரோகம் செய்து விட்டு நண்பர் வேஷம் போடுவதா? மு.க.ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்

சென்னை:-

வன்னியர்களுக்கு துரோகம் செய்து விட்டு இப்போது நண்பர்போல் வேஷம் போட ஸ்டாலின் முயற்சிக்கிறார். அது ஒருபோதும் எடுபடாது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடுமையாக சாடியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்குவந்தால் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும். மறைந்த முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட ஏராளமான வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கிறார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தோல்வி அடைவது மட்டுமின்றி வைப்புத்தொகைகூட வாங்க முடியாதோ என்ற அச்சம் தான் அவரை இந்த நிலைக்கு தள்ளியிருக்கிறது. மக்களவை தேர்தலில் நகைக்கடனை தள்ளுபடி செய்வோம் என்பது உள்ளிட்ட புரட்டான வாக்குறுதிகளை வழங்கி ஏழை மக்களை ஏமாற்றி கடனாளிகளாக்கிய ஸ்டாலின் இப்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வன்னியர்களின் வாக்குகளை சுரண்டும் நோக்குடன் பொய் வாக்குறுதிகளை வீசியுள்ளார்.

வேலூர் தொகுதி தேர்தலின்போதே மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு விட்டது என்பதை கூட உணராமல் கற்பனையில் மிதக்கிறார் ஸ்டாலின். வன்னியர்கள் என்றாலே எட்டிக்காயாக கசக்கும் ஸ்டாலினுக்கு இப்போது வன்னியர்கள் வெள்ளக்கட்டியாக இனிக்கிறார்கள் போல் இருக்கிறது. வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை தி.மு.க. தான் வழங்கியதாகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்போவதாகவும் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

1989-ம் ஆண்டில் வன்னியர்களுக்கு தி.மு.க. அரசு இட ஒதுக்கீட்டை எளிதாக தூக்கி கொடுத்துவிடவில்லை. தமிழ்நாட்டில் மிகவும் பிறப்படுத்தப்பட்ட நிலையில் உள்ள வன்னியர்களுக்கு 17 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 13.11.1969 அன்று அமைக்கப்பட்ட சட்டநாதன் குழு அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

ஆனால் அந்த பரிந்துரையை செயல்படுத்தாமல் மொத்த இட ஒதுக்கீட்டின் அளவை 41 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்தியதுடன் நிறுத்திக் கொண்டு வன்னியர்களுக்கு துரோகம் செய்தது கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு தான். அதன் பின் 1980-ம் ஆண்டில் வன்னியர் சங்கங்களை ஒருங்கிணைத்து 6 ஆண்டுகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி தொடர் சாலை மறியல் போராட்டத்தின்போது 21 இன்னுயிரை தியாகம் செய்து பெற்றது தான் 20 சதவீத இட ஒதுக்கீடாகும். 25.11.87 அன்று என்னையும், பிற சமுதாய தலைவர்களையும் அழைத்து பேசிய அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க ஒப்புக் கொண்டார்.

ஆனால் அடுத்த ஒரு மாதத்திற்குள் அவர் மறைந்து விட்ட நிலையில் பின்னர் வந்த ஆளுநர் ஆட்சியில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்காக 12.12.88 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. 30.7.2010 அன்று கருணாநிதி எழுதிய கடிதத்தில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று வெளிப்படையாகவே அறிவித்தார். அப்படிப்பட்ட தி.மு.க. இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தனி ஒதுக்கீடு வழங்குவோம் என்று கூறுவது ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவதற்கு இணையானது தான்.

தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதைவிட கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம் எதுவும் இருக்க முடியாது. விக்கிரவாண்டியில் ஓட்டு பொறுக்க வேண்டும் என்பதற்காக மணிமண்டபம் கட்டுவதாக கூறும் ஸ்டாலின் இரு ஆண்டுகளுக்கு முன் கோவிந்தசாமி நூற்றாண்டு விழா வந்தபோது தி.மு.க. சார்பில் பிரம்மாண்டமாக விழா எடுத்து கொண்டாடி இருக்கலாமே. அவ்வாறு செய்யாதது ஏன்? கோவிந்சாமி மறைந்து 23 ஆண்டுகளாக அவரது குடும்பத்திற்கு தேர்தலில் கூட போட்டியிட வாய்ப்பு தராமல் ஒதுக்கி வைத்திருந்ததற்கு காரணம் வன்னியர்கள் மீதான ஸ்டாலின் வெறுப்புணர்வு என்பதை தவிர வேறு எதுவாக இருக்க முடியும்.

முழுக்க முழுக்க வன்னியர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஸ்டாலின் இப்போது திடீரென தன்னை வன்னியர்களின் தோழன் என்று கூறிக்கொண்டால் அதை நம்பி ஏமாற வன்னியர்கள் ஒன்றும் அப்பாவி தி.மு.க. தொண்டர்கள் அல்ல. தேர்தலின்போது கொண்டாடவும், தேர்தல் முடிந்தவுடன் தூக்கி எறிவதற்கும் வன்னியர்கள் கருவேப்பிலையும் அல்ல என்பதை காலமும், மக்கள் தீர்ப்பும் மு.க.ஸ்டாலினுக்கு உணர்த்தும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.