சிறப்பு செய்திகள்

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை – முதலமைச்சர் பேட்டி

சென்னை

தெலுங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையாக இருக்கக்கூடிய இந்நன்னாளில் உங்களை எல்லாம் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தமிழிசை சவுந்தரராஜன் தமிழகத்தைச் சேர்ந்தவர். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தெலுங்கானாவில் ஆளுநர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இது தமிழக மக்களுக்குப் பெருமை சேர்க்கின்ற மிகப்பெரிய பதவியாக கிடைத்திருக்கிறது. இதற்காக பாரதப் பிரதமருக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு மரியாதைக்குரிய தமிழிசை சவுந்தரராஜனுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி:- கீழடியில் உள்ள அருங்காட்சியகத்திற்கு நீங்கள் எப்பொழுது செல்லப் போகின்றீர்கள்?

பதில்:- கீழடியில் உள்ள அருங்காட்சியகத்திற்கு ஏற்கனவே அமைச்சர் பலமுறை சென்று வந்திருக்கிறார், அதற்குத் தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதுகுறித்த அறிக்கைகளை எனக்கு அளித்துக் கொண்டிருக்கிறார்கள். கீழடி அகழ்வாய்வில் கிடைக்கின்ற பொருட்கள் பற்றிய விபரங்களை எல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றையெல்லாம் கேட்டறிந்து கொண்டிருக்கிறோம். அதற்குத் தேவையான வசதிகளையும் தமிழக அரசு செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறது.

கேள்வி:- கோதாவரி- காவேரி இணைப்பு குறித்து தெலுங்கானாவின் கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜனிடம் ஏதாவது அழுத்தம் கொடுத்தீர்களா?

பதில்:- இது மரியாதை நிமித்தமான சந்திப்பு இது குறித்து மத்திய அரசால் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. தெலுங்கானா, ஆந்திரா வழியாக தமிழகத்திற்கு நீரை கொடுப்பதற்கு மத்திய அரசின் மூலம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கேள்வி:- விக்ரவாண்டி, நாங்குநேரி இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு உண்டான களச்சூழல் எவ்வாறு உள்ளது? அங்கு நிச்சயமாக பணம் தான் வெல்லும் என்ற ஒரு கருத்தை எதிர்க்கட்சித் தலைவர் சொல்கிறாரே?

பதில்:- அப்படி என்றால் அவர் பணம் கொடுப்பார் என்று தான் அர்த்தம். நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அவர் பணம் கொடுத்து வெற்றி பெறுவதற்கான முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இதுபோல்தான், வேலூர் தேர்தலின்போது தேர்தல் அதிகாரியின் உத்தரவின் பேரில் வருமான வரித்துறை அவர்களுக்கு வேண்டியவர்கள் வீட்டில் சோதனையிட்டு பணம் பறிமுதல் செய்ததை ஊடகத்தின் வாயிலாகவும், பத்திரிகைகள் வாயிலாகவும் பார்த்தோம். எனவே அவர் அந்த நினைப்பில் இருப்பார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தேர்தலில் மக்களின் செல்வாக்கோடு நாங்கள் வெற்றி பெறுவோம். எங்களுடைய கூட்டணி கட்சிகள் மிகச் சிறப்பாக எங்களுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கின்றன. மிகச் சிறந்த முறையிலே எங்களது கழகத் தொண்டர்களும், அமைப்பாளர்களும், கூட்டணி கட்சியினரும் தேர்தல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள், இரு தொகுதிகளிலும் நிச்சயமாக நாங்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.

கேள்வி:- திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு 20 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று ஸ்டாலின் சொல்லியிருக்கின்றாரே?

பதில்:- ஏற்கனவே மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு இருக்கிறது. ஏற்கனவே உள்ளதை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இப்பொழுது எதுவும் கொடுத்ததாக எனக்கு தெரியவில்லை. ஏற்கனவே அவர்களுடைய ஆட்சியில் இருந்தது என்று சொல்லியிருக்கிறார். இவ்வளவு காலம் மறந்து விட்டார் என நான் நினைக்கின்றேன். எங்களை பொறுத்தவரைக்கும் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்ற வகுப்பினருக்கு உரிய முறையில் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் விகிதாச்சார முறையில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை சட்டத்தின் வாயிலாக பெற்றுத் தந்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கின்ற BC, MBC, SC, ST என எல்லா பிரிவினருக்கும் சட்டப் பாதுகாப்புடன் இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தது அம்மாவின் அரசு.

கேள்வி:- மேகதாதுவின் குறுக்கே அணை கட்டுவதற்கு மீண்டும் மத்திய அரசை அணுகி இருக்கின்றார்களே?

பதில்:- மேகதாதுவின் குறுக்கே அணை கட்டக்கூடாது என்று ஏற்கனவே நாம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இப்பொழுது இருக்கின்ற அரசுக்கு முன்பு கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அந்தக் காலகட்டத்தில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்த மரியாதைக்குரிய சிவக்குமார் அவர்கள் மேகதாது அணை கட்டப்படும் என்று அந்த இடத்திற்குச் சென்று ஒரு அறிக்கையை விடுத்தார். அறிக்கை வெளி வந்ததை நாங்கள் ஊடகம் மற்றும் பத்திரிகைகளின் வாயிலாக அறிந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே மேகதாது அணை கட்டக்கூடாது என்று வலியுறுத்தி மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் மற்றும் பாரதப் பிரதமருக்கும் கடிதங்கள் வாயிலாகவும் நேரிலும் கோரிக்கை வைத்துள்ளேன். அவருக்கு பல கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதுகுறித்து 8.10.2018, 27.11.2018, 15.06.2019, 24.06.2019, 27.06.2019, 10.08.2019 ஆகிய தேதிகளில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கும், நான் பாரதப் பிரதமரை நேரில் சந்தித்த பொழுதும் கோரிக்கை மனு அளித்துள்ளேன்.

அதில் மேகதாதுவின் குறுக்கே அணை கட்டக்கூடாது, அதனால் தமிழகம் பாதிக்கப்படும் என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். அந்த அடிப்படையில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், 19.07.2019 அன்று கர்நாடக அரசுக்கு மேகதாது அணை கட்ட அனுமதி மறுத்துள்ளது என்பதை இந்த நேரத்தில் நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

கேள்வி:- 46 நபர்கள் மீது தேச துரோக வழக்கு பதியப் பட்டிருக்கிறது.

பதில்:- அது நீதிமன்றத்தில் உள்ளது. எனவே அதில் தலையிட இயலாது.

கேள்வி:- தமிழகத்தில் டெங்குக் காய்ச்சல் மீண்டும் இருப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பதில்:- டெங்கு பிரச்சினை என்பது தமிழகத்தில் மட்டுமல்ல, அனைத்து வசதிகளையும் பெற்றுள்ள சிங்கப்பூரிலும் உள்ளது என்பதை ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளின் வாயிலாகத் தெரிந்து கொண்டோம். 10,000 நபர்கள் அங்கே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தெலுங்கானாவில் 9 ஆயிரம் நபர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் இருந்து தான் நம்முடைய பகுதிகளில் அதிகமாகப் பரவி இருக்கின்றது. எனவே இதனை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்காக என்னுடைய தலைமையில் தலைமைச் செயலகத்தில் இரண்டு முறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டிருக்கிறது. தண்ணீரிலிருந்து தான் கொசு உற்பத்தி ஆகின்றது. ஆகவே பொதுமக்கள் அருள்கூர்ந்து தங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருந்தால் அதனை அப்புறப்படுத்தி விடுங்கள்.

தண்ணீரை மூடி வைக்க வேண்டும் என்றும் இந்த நேரத்தில் அன்போடு நான் கேட்டுக்கொள்கின்றேன். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு அரசால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பொது மக்கள் ஏதாவது காய்ச்சல் வந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி, பரிசோதனை செய்து முறையான சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.