தற்போதைய செய்திகள்

அம்மா பிறந்த நாளை முன்னிட்டு 71 லட்சம் மரக்கன்று நட திட்டம் – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தகவல்

சென்னை:-

அம்மா பிறந்தநாளை முன்னிட்டு இந்தாண்டு 71 லட்சம் மரங்களை நட திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

சென்னை கிண்டி பூங்காவில் வன வாரவிழா நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

முதல்வர் மற்றும் துணை முதல்வரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் எந்த மரங்கள் வளர்க்க வேண்டுமோ அந்த மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. ஒக்கி புயல் பாதித்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக எங்கும் மரங்கள் வெட்டப்படவில்லை. சிறுவர் பூங்காவிற்கு மத்திய அரசின் உதவிகள் கிடைக்கும்போது, மேலும் பல மிருகங்கள் வரவழைக்கப்படும்.

புரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளை முன்னிட்டு மரங்களை வைத்தோம். இதுவரை 5 கோடி மரங்களை வளர்த்துள்ளோம். இந்த வருடம் அம்மா பிறந்தநாளை முன்னிட்டு 71 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. மழை நீர் சேகரிப்பு எப்படி சட்டத்தின் படி சேகரிக்கப்படுகிறேதோ அதுபோல மரங்களும் வளர்க்க சட்டம் உள்ளது.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார்.

அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:-

மீன்கள் உற்பத்திக்கு சோதனை முறையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ரூ.10 கோடி செலவில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு அந்த பணி துவங்கும்போது மீன்கள் உற்பத்தி அதிகமாகும். அழிந்து போகும் நிலையில் உள்ள மீன்களை வளர்க்க இந்த திட்டம் உதவும். பாராம்பரிய மீனவர்கள் 8 நாட்டி கல் தூரத்திற்குள் உள்தொழில் செய்யலாம். 8 நாட்டி கல் தாண்டியும் தொழில் செய்யலாம். கடல் வளத்தை பாதுகாக்க கடல் அமலாக்கப்பிரிவு உருவாக்கப்படவுள்ளது.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.