தற்போதைய செய்திகள்

மதுரையில் பன்னாட்டு விமான சேவை – மக்களவையில் ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி. கோரிக்கை

புதுடெல்லி

மதுரையில் பன்னாட்டு விமான சேவை ஏற்படுத்த வேண்டும் என்று மக்களவையில் ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி. கோரிக்கை விடுத்தார்.

தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், கழக மக்களவை குழு தலைவருமான ப.ரவீந்திரநாத் குமார் விமான சட்ட திருத்தத்திற்கு ஆதரவளித்து ஆற்றிய உரை வருமாறு:-

நாடு முழுவதும் இயக்கப்படும் விமானங்களில் சமீப காலமாக ஏற்படுகின்ற தொழில்நுட்ப கோளாறுகளை நீக்கும் பொருட்டும், விமான பாதுகாப்புகளை மேலும் உறுதி செய்யும் பொருட்டும் 80 ஆண்டுகளை கடந்த “1934-ம் வருட விமான சட்டத்தில்” திருத்தம் கொண்டு வந்திருப்பதற்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

முந்தைய காங்கிரஸ் அரசில் – சர்வதேச விமான போக்குவரத்து கழகத்தின் 2012-ம் ஆண்டு தணிக்கை அறிக்கையில் “விமான சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்” என்று கூறப்பட்டாலும், அதற்கு நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தான் தற்போது செயல்வடிவம் கொடுத்துள்ளது. இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் சிவில் விமான போக்குவரத்துத் துறையில் அதிகாரமிக்க “சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்” “விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம்”, “விமான விபத்து ஆணையம்” ஆகிய மூன்று அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன.

தற்போது கொண்டு வரப்படும் சட்ட திருத்தத்தை மீறுவோருக்கு “விமான போக்குவரத்து ஆரம்பிப்பது”, “விமான நிலையங்கள் அமைப்பது”, “விமானங்களை இயக்குவது, பழுது பார்ப்பது மற்றும் பராமரிப்பது” போன்றவற்றிற்காக வழங்கப்பட்டுள்ள லைசென்சுகள், அனுமதிகள், சான்றிதழ்கள், ஆகியவற்றை ரத்து செய்யும் அதிகாரமும் சிவில் விமான போக்குவரத்து ஆணையத்திற்கு இந்த திருத்தச் சட்டம் வழங்குகிறது.

2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உள்ள 680 விமானங்கள் கொண்ட விமான போக்குவரத்தை 2023-24-க்குள் 1200 ஆக உயர்த்துவதற்கு தேவையான சூழலை உருவாக்கி- விமான போக்குவரத்தில் வியத்தகு வளர்ச்சியை ஏற்படுத்திட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் ஜனவரி 31-ந்தேதி தாக்கல் செய்யப்பட்ட “பொருளாதார ஆய்வு” அறிக்கை கோடிட்டுக் காட்டியிருக்கிறது.

இந்த சட்ட திருத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் எனது உரையை நிறைவு செய்யும் முன்பு, தமிழக அரசின் சார்பில் விமான போக்குவரத்து அமைச்சரின் கவனத்தை எனது மாநிலத்தின் பால் ஈர்க்க விரும்புகிறேன். மதுரை விமான நிலையத்தில் பன்னாட்டு சேவை இல்லாத காரணத்தால் தமிழகத்தின் தென் மாவட்டங்களின் வர்த்தகம், தொழில், பொருளாதாரம், சுற்றுலா ஆகிய துறைகளின் முன்னேற்றம் குறுகிய வட்டத்திற்குள்ளேயே உள்ளது.

ஆகவே பல்வேறு நாடுகளுக்கு இடையிலான “நாடுகளுக்கு இடையிலான விமான சேவை ஒப்பந்தத்தில்” மதுரை விமான நிலையத்தையும் சேர்த்து எங்கள் விமான நிலையத்திற்கும் அந்த நாட்டின் பயணிகள் மற்றும் சரக்கு விமானங்கள் வந்து போவதற்கு ஆவன செய்திட வேண்டும் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் பயணத்திற்கு வசதியாக எனது தேனித் தொகுதியில் உள்ள கம்பம் நகரை “விமான சேவையை விரிவுபடுத்தும் 400 இரண்டாம் கட்ட நகரங்களின் பட்டியலில்” சேர்த்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இந்த “விமான சட்ட திருத்தம் 2020” – த்திற்கு எனது ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி. பேசினார்.