தற்போதைய செய்திகள்

சென்னை மாநகர் போக்குவரத்து கழக பணிமனையில் 2 அமைச்சர்கள் ஆய்வு – கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சென்னை

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மாநகர் போக்குவரத்து கழக பணிமனையில் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள், கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யும் பணியை நேற்று காலை மாநகர் போக்குவரத்துக் கழகம், மத்திய பணிமனையில் பார்வையிட்டனர். இந்நிகழ்வின் போது, போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர்
டாக்டர் பீலா ராஜேஷ், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கோ.கணேசன் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கு.இளங்கோவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

முதலமைச்சர் உத்தரவின்படி, கொரோனா வைரஸை கட்டுப்படுத்திட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 17.03.2020 அன்று போக்குவரத்துத்துறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 22,000 அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள், 4,000 தனியார் பேருந்துகள், 4,600 கம்பெனி பேருந்துகள், 2,500 ஆம்னி பேருந்துகள் உள்ளிட்ட 32,000 பேருந்துகள் மூலமாக தமிழகத்தில் நாளொன்றுக்கு சுமார் 2 கோடியே, 50 லட்சம் மக்கள் பயணம் மேற்கொள்ளும் மிகப்பெரிய துறையாக, போக்குவரத்துத்துறை உள்ளது.

இந்த போக்குவரத்துத்துறையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு வேண்டிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும், பணிமனைகளில் பேருந்துகளை கிருமிநாசினி கொண்டு முறையாக சுத்தம் செய்வது மற்றும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு தேவையான முகக்கவசங்கள் அணிவது போன்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேருந்து நிலையங்களில் கைகளை சுத்தம் செய்வதற்கு உள்ளாட்சித்துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 31.03.2020 வரை புதியதாக ஓட்டுநர், பழகுநர் உரிமம் பெறுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காலாவதியான உரிமம் மட்டும் புதுப்பித்து வழங்கப்படும். குளிர்சாதனப் பேருந்துகளில் இருக்கக்கூடிய திரைச்சீலைகள் அகற்றப் பட்டுள்ளது. பயணிகளுக்கு வழங்கக்கூடிய போர்வைகள் நிறுத்தப்பட்டுள்ளது

. தேவைப்பட்டால் பயணிகள் சொந்த போர்வைகளை உபயோகப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. குளிர்சாதன அளவு குறைவாக வைத்து பேருந்துகளை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்துத்துறையில் இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தலின்படி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழக மாநில எல்லைக்குட்பட்ட, 21 போக்குவரத்து சோதனை சாவடிகளிலும், ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்திலிருந்து நமது மாநிலத்திற்கு வரும் அனைத்து வாகனங்களையும் முறையாக கண்காணித்து, கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நமது பேருந்துகள் அண்டை மாநிலங்களுக்கு செல்லும்பொழுது அதனை அவர்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்திட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோயினை தடுக்கும் பொருட்டு, பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதை தவிர்க்க, கோயில் திருவிழாக்கள், சிறப்பு வழிபாடுகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேள்வி:- ஓட்டுநர், நடத்துனர்களுக்கு போதிய முகக்கவசம் வழங்குவது குறித்து ?

பதில்:- தேவைப்படும் பணியாளர்களுக்கு முகக்கவசம் வழங்கிட அறிவுத்தப்பட்டுள்ளது. அரசின் சார்பில் கொரோனா வைரஸ் நோயினை தடுப்பதற்காக, 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்துத்துறைக்கு 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது:- முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, பொதுமக்கள் பயணங்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் குறைவாக இருந்தால் சுத்தப்படுத்தும் பணி எளிதாக அமையும். வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் இந்தியா வரும் பயணிகளுக்கும் தங்களது பயணத்தை தவிர்த்துள்ளார்கள்.

இதனால், விமான நிலையத்தினை எளிதாக சுத்தம் செய்து நோய் பரவாமல் தடுக்க இயலும். அனைவரும் தங்கள் வீடுகளிலேயே பாதுகாப்புடன் இருப்பதற்காகவே, அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் மக்கள் அதிகம் கூடுகின்ற திரையரங்கம், வணிக வளாகம், கடற்கரை, பொழுதுபோக்கு பூங்கா மற்றும் சுற்றுலா தளங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்தால் நல்லது.

கேள்வி:- முகக்கவசங்கள் தேவையான அளவு உற்பத்தி இல்லை என்பது குறித்து ?

பதில்:- அரசு மருத்துவமனைகளில் 5 லட்சம் முகக்கவசங்கள் இருப்பில் உள்ளன. மேலும், 25 லட்சம் முகக்கவசங்கள் தயாரித்திட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் தேவைக்கு அதிகமாகவே முகக்கவசங்கள் உள்ளது.

முதலமைச்சர் ஆணைக்கிணங்க, மக்கள் நல்வாழ்வுத் துறையானது போக்குவரத்துத்துறை, பள்ளிக் கல்வித்துறை, ரயில்வே துறை, விமானத்துறை, சமூக நலத்துறை போன்ற பிற துறைகளுடன் இணைந்து கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்புடன் மேற்கொண்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தனிமனித வாழ்க்கையை பாதிக்காமல் மிக கவனமாக எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை.

இவ்வாறு அவர் கூறினார்.