தற்போதைய செய்திகள்

தமிழகத்தை சிறந்த மாநிலமாக உருவாக்க தொலைநோக்கு திட்டங்கள் நிறைவேற்றம் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பெருமிதம்

ஈரோடு:-

தமிழகத்தை சிறந்த மாநிலமாக உருவாக்க தொலைநோக்கு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பெருமிதத்துடன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னிமலை சமுதாய கூடத்தில் சமூக நலத்துறையின் சார்பில் தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்றது. ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ., சட்டமன்ற அவைக் குழு தலைவர் கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ., மொடக்குறிச்சி வி.பி.சிவசுப்பிரமணி எம்.எல்.ஏ., காங்கேயம் உ.தனியரசு எம்.எல்.ஏ., சட்டமன்ற உறுப்பினர்கள் பல்லடம் கரைப்புதூர் அ.நடராஜன்எம்.எல்.ஏ., திருப்பூர் வடக்கு கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 83 பயனாளிகளுக்கு ரூ.23.06 லட்சம் மதிப்பிலான தாலிக்கு தங்கம் மற்றும் ரூ.36.75 லட்சம் மதிப்பிலான திருமண நிதியுதவி வழங்கி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2011-ம் ஆண்டும் ஏழை, எளிய பெண்களுக்கு 4 கிராம் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். 4 கிராமாக வழங்கப்பட்டு வந்த தங்கத்தினை 2016-ம் ஆண்டு 8 கிராம் தங்கமாக வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஏழை பெண்களுக்கான திருமண உதவி திட்டத்தின் கீழ் திருமாங்கல்யம் செய்ய 8 கிராம் தங்க நாணயத்துடன் பட்டதாரி அல்லாத பெண்களுக்கு ரூ.25,000 நிதியுதவியும், பட்டம் அல்லது பட்டயப்படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவியும் வழங்கி வருகிறார்.

ஈரோடு மாவட்டத்தில் பட்டம் பயின்ற 1,720 பெண்களுக்கும், 10-ம் வகுப்பு பயின்ற 780 பெண்களுக்கும் என 2,500 பெண்களுக்கு தலா 8 கிராம் வீதம் ரூ.6.94 கோடி மதிப்பில் 2500 பவுன் தாலிக்கு தங்கம் மற்றும் ரூ.10.55 கோடி மதிப்பில் திருமண நிதியுதவியும் வழங்கப்படுகிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2023-ம் ஆண்டிற்குள் ஏழை, எளியோர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை வழங்கினார். அம்மாவின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் தலைமையிலான அரசு தொலைநோக்கு சிந்தனையுடன் எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறது. பள்ளி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 4 செட் வண்ண சீருடை, புத்தகங்கள், பென்சில், புத்தகப்பை, காலணி, பேருந்து பயண அட்டை, 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டி, 12-ம் பயிலும் மாணவர்களுக்கு மடிகணினி என அனைத்தும் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. வீடில்லாதவர்களுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் பசுமை வீடுகள் கட்ட மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினார்.

இதைத்தொடர்ந்து கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பில் சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், காளிக்காவலசு தொடக்க மற்றும் தொழிலியல் நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் ரூ.37.70 லட்சம் மதிப்பீட்டில் பொது பயன்பாட்டு வசதி மைய கட்டடத்தை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.