தற்போதைய செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – கழக நிர்வாகிகளுடன் அமைச்சர் ஆலோசனை

திருவண்ணாமலை:-

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக கழக நிர்வாகிகளுடன் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆலோசனை நடத்தினார்.

விக்கரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை வெற்றி பெற செய்ய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் காணை ஒன்றியத்திலில் உள்ள நல்லாபாளையம் கிராமத்தில் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்திற்கு செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசியதாவது:-

தமிழகத்தை காக்க வந்த தவ புதல்வர்களாய் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர், அம்மா விட்டு சென்ற பணிகளை திறம்பட செய்து மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்து வருகின்றனர். அம்மாவின் வழியில் நடைபெறும் கழக அரசு எண்ணற்ற திட்டங்களை பொதுமக்களுக்காக செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்குவதற்காக அமெரிக்கா, துபாய், லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகள் சென்று பல தொழில் நிறுவனங்களுடன் தமிழகத்தில் ரூ.8830 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளார். மொத்தம் 41 நிறுவனங்களுடன் புரிந்துனர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிகத்திலுள்ள சுமார் 37000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

தமிழக அரசு தற்போது கல்வியில் புரட்சி செய்து வருகிறது. அரசு பள்ளி, மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆங்கிலவழி கல்வியும் இலவசம் என அறிவித்துள்ளது. இதனால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீட் தேர்வை எதிர்த்து கழக மாநிலங்களவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். தமிழகத்தை பல துறைகளில் முன்னோடி மாநிலமாக கொண்டு வந்த அம்மாவின் வழியில் முதல்வர் ஆட்சி செய்து முன்னோடி மாநிலமாக கொண்டு வருகிறார். கழக அரசின் சாதனைகளை மக்களிடத்தில் கூறி கழக வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய பாடுபட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ராமச்சந்திரன், விழுப்புரம் வடக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் இ.என்.நாராணனன், பெரணமல்லூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ப.திருமால் மற்றும் அப்பகுதி நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.