தமிழகம்

மதுரை ரிங் ரோடு சாலையில் 3 சுங்கச்சாவடிகள் ஏன்? பேரவையில் முதலமைச்சர் விளக்கம்

சென்னை

மதுரை ரிங் ரோடு சாலையில் 3 சுங்கச்சாவடிகள் ஏன்? என்று பேரவையில் முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசுவுக்கு அளித்த பதில் வருமாறு:-

சட்டமன்றப் பேரவையில் பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை குறித்த கேள்விகள் இடம் பெறவில்லையென்றாலும், பல்வேறு மானியக் கோரிக்கைகளின்போது உறுப்பினர் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை சம்பந்தமாகக் கேட்கும் கேள்விகளுக்கான உரிய விளக்கத்தை தகுந்த முறையில் அவையில் அளித்துக் கொண்டிருக்கின்றேன். உறுப்பினர்கள் கடிதம் மூலம் கொடுக்கின்ற கோரிக்கைகளுக்குக்கூட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மதுரை மாநகராட்சியில் உறுப்பினர் குறிப்பிட்டுள்ள மூன்று இடங்களில் மட்டும் தான் வசூல் செய்து கொண்டிருக்கிறார்களே தவிர வேறு இடங்களில் இல்லை. ஏற்கனவே, ஆரம்பத்திலிருந்தே, மதுரை ரிங் ரோட்டில் மதுரை மாநகராட்சி சுங்கக் கட்டணத்தை வசூலித்துக் கொண்டிருந்தது. மதுரை மாநகர மக்கள், போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கின்ற காரணத்தால் சாலைகளை விரிவுபடுத்த வேண்டுமென்று வைத்த கோரிக்கைக்கேற்ப, இரு வழிச் சாலை, நான்கு வழிச் சாலையாக விரிவுபடுத்தப்பட்டது.

இதற்கு அரசாங்கமே முழுத் தொகையையும் செலவழிக்க முடியாத காரணத்தினால், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்கனவே சுங்கம் வசூலித்துக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது நான்கு வழிச் சாலையாக விரிவுபடுத்தப்பட்ட காரணத்தினால் அதற்கேற்றவாறு சுங்கம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும், உறுப்பினர் தெரிவித்த மூன்று இடங்களில், பல்வேறு பிரிவுச் சாலைகள் இணைகின்றன, மற்ற இடங்களில் இதுபோன்று பிரிவுச் சாலைகள் இணைவதில்லை. எனவே, உறுப்பினர் அவர்கள் தெரிவித்ததைப் போல மூன்று இடங்களில் சுங்கக் கட்டணம் வசூலிக்கின்றனர்.

அதுவும், குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டும், தூரத்திற்கு ஏற்றவாறு வசூலிக்கின்றனர். மொத்தம் 27 கிலோ மீட்டர் சுற்றுச் சாலை இருக்கிறது. முதல் மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு கட்டணமும், அதற்கு அடுத்த இரண்டு சுங்கச் சாவடிகளில் அதற்கேற்ற கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. எனவே, இதில், உறுப்பினர் அவர்களுக்கு எந்தவித ஐயப்பாடும், சந்தேகமும் தேவையில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், 90 சதவிகித பணிகள் முடிந்தால் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவது போல் தான் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் சுங்கக் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், உறுப்பினர் சுங்கச்சாவடிகளில் சில வசதிகள் செய்யவில்லை என்று சொல்கிறார். அந்த சுங்கச் சாவடிகள் புறவழிச் சாலைகளில் செல்லாமல், நகர்ப்புறத்தில் இருக்கின்ற காரணத்தினால், இதுபோன்ற வசதிகள் தேவைப்படாததாலும், இதற்கு கூடுதல் செலவாகும் என்பதாலும் டெண்டர் வெளியிடும்பொழுது இதுபோன்ற வசதிகள் சேர்க்கப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

உறுப்பினர், சாலைகளின் அகலம் குறைவாக இருப்பதாகத் தெரிவித்தார். ஏற்கனவே அந்தந்த இடங்களில் இருந்த வாகன போக்குவரத்தை வைத்து அந்தச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்பொழுது, வாகன போக்குவரத்துகள் அதிகரித்திருப்பதனால், சாலைகளை அகலப்படுத்த நிலம் எடுக்கின்ற பணி நடைபெறும்பொழுது, நில உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடினார்கள். இப்பொழுது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, தற்பொழுது நான்கு வழிச் சாலையாக உள்ளதை 6 வழிச் சாலையாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விளக்கம் அளித்தார்.