தற்போதைய செய்திகள்

தமிழகத்திற்கு ரூ.11335.74 கோடி நிலுவைத்தொகை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் – மக்களவையில் கழக குழு தலைவர் ப.ரவீந்திரநாத்குமார் வலியுறுத்தல்…

புதுடெல்லி:-

கடந்த இரு வருடங்களில் மட்டும் 11335.74 கோடி ரூபாய் நிதி தமிழகத்திற்கு வழங்கப்படாமல் இருக்கிறது. இந்த நிதியை உடனடியாக தமிழகத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கழக மக்களவை குழுத் தலைவர் ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி வலியுறுத்தி உள்ளார்.

2019-20ம் ஆண்டின் மத்திய நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் மக்களவையில் பங்கேற்று கழக மக்களவை குழுத் தலைவர் ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி ஆற்றிய உரை வருமாறு:-

“வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை” முன் வைத்து நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ள முதல்- முழுநேர பெண் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு எனது பாராட்டுதலையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய துணை நின்ற இணையமைச்சர் அனுராக் சிங் தாகூருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்ன நடக்கிறது? நிதி நிலை அறிக்கையின் தொலை நோக்குப் பார்வை என்ன என்று இங்கே என் சக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள். எனது பாணியில் இதற்கு நான் பதில் சொல்ல விரும்புகிறேன். இது பிரதமர் நரேந்திரமோடியின் ஜனநாயகம். அதாவது அந்த டெமாக்ரடிஷியின் அர்த்தம் என்ன நான் விளக்க விரும்புகிறேன். (In English D- Development budjet. E- Enormous budget, M-Modernization budget O-Organised budget, C- Corruption free budget. R- Revolutionary budget, A-Assocoated budget, C-Cultural budget, Y-Young budget )

இது வளர்ச்சிக்கான நிதி நிலை அறிக்கை. மகத்தான நிதி நிலை அறிக்கை. நவீனமயமாக்குதலுக்கான நிதிநிலை அறிக்கை. திட்டமிடுதலுக்கான நிதி நிலை அறிக்கை. ஊழலை ஒழிக்கும் நிதி அறிக்கை. புரட்சிகரமான நிதி நிலை அறிக்கை. நாட்டின் முன்னேற்றத்தோடு தொடர்புடைய நிதி நிலை அறிக்கை. கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நிதி நிலை அறிக்கை- எல்லாவற்றிற்கும் மேலாக இளைஞர்களுக்கான நிதி நிலை அறிக்கை. இவை அனைத்தும் தொலை நோக்குப்பார்வை கொண்டு பிரதமர் நரேந்திரமோடியின் ஜனநாயகம்.

விவசாயிகளின் வருமானத்தை 2022-க்குள் இரட்டிப்பாக்குவது இந்த நிதி நிலை அறிக்கையின் முக்கிய நோக்கம். அதுதான் “Gaon Gareeb and Kisan” முழக்கம். “ஜல் ஜீவன் மிஸன்” அறிவிப்பின் நோக்கம் 2024-க்குள் நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதாகும். “ஜல் ஜக்தி” அறிவிப்பின் மூலம் “நீர் ஆதாரம் மற்றும் குடிநீர் விநியோக” மேலாண்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே “உஜ்வாலா” மற்றும் “சௌபாக்யா” திட்டங்கள் கிராமப்புற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

“பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பத யோஜனா” திட்டத்தின் கீழ் மீன்வள நிர்வாக கட்டமைப்பை உருவாக்குவது. கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த 10 ஆயிரம் “விவசாயிகள் உற்பத்தி அமைப்புகளை” தோற்றுவிப்பது. பொருளாதார வளையத்திற்குள் கொண்டு வருவதற்காக பாரம்பரிய கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள 50 ஆயிரம் பேருக்கு 100 குழுமங்களை (Clusters) உருவாக்குவது போன்ற நல்ல பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

80 “வாழ்வாதாரத்திற்கு தேவையான அமைப்புகள்” (livelihood Business Incubators ) ஏற்படுத்துவது. புதிய தொழில் முனைவோருக்கு 20 தொழில்நுட்ப அமைப்புகள் அமைப்பது (Technolgy Business Incubators ) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு 60 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு 27 ஆயிரம் ஒதுக்கீடு. தூய்மை இந்தியா திட்டத்திற்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு, பிரதம மந்திரியின் கிஸான் யோஜனா திட்டத்திற்கு 75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. 1.25 லட்சம் கிலோ மீட்டர் கிராமப்புற சாலைகளை மேம்படுத்த 80 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. ஜீரோ பட்ஜெட் வேளாண்மை என பல முன்னனித் திட்டங்கள் நிறைந்துள்ள இந்த நிதி நிலை அறிக்கை மூலம் எல்லாம் முன்னணித் திட்டங்கள் தான் பிரதமரின் வறுமை ஒழிப்புத் திட்டங்கள்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் தலைமையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களையும், மத்திய அரசின் திட்டங்களையும் தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறது. நாட்டின் மொத்த உற்பத்திக்கு தமிழ்நாடு இரண்டாவது பெரிய மாநிலமாக துணை நிற்கிறது. சுனாமி, கஜா, ஒக்கி புயல் மற்றும் வறட்சி போன்றவற்றால் சில நேரங்களில் தமிழ்நாடு கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஆகவே மத்திய அரசின் கூடுதல் நிதியுதவி தமிழகத்திற்கு தேவைப்படுகிறது.

ஆனால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கான நிதி இன்னும் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது கவலையளிக்கிறது. கடந்த இரு வருடங்களில் மட்டும் 11335.74 கோடி ரூபாய் நிதி தமிழகத்திற்கு வழங்கப்படாமல் இருக்கிறது. நிலுவையில் உள்ள இந்த நிதியை உடனடியாக தமிழகத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது தொகுதியான தேனி நாடாளுமன்ற தொகுதி உட்பட தமிழக மக்களின் வீர விளையாட்டான பாரம்பரிய ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்க பிரதமர் எடுத்த நடவடிக்கைக்கு இந்த நேரத்தில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தென் தமிழகத்தில் உள்ள மக்களின் உயிர் காக்கும் சிகிச்சைகளுக்காக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுமதி அளித்து, அடிக்கல் நாட்டிய பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சில கட்சிகள் 15 வருடங்கள் மத்தியில் ஆட்சியில் இருந்தார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் இது போன்ற மருத்துவமனையை தமிழகத்திற்கு கொண்டு வர முடியவில்லை. ஆகவே நம் பிரதமர் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு செயல்படுகிறார். இந்த நேரத்தில் 1976-யை திரும்பிப் பார்க்கிறேன். கச்சத்தீவை தாரை வார்த்த அந்த நிகழ்வை எண்ணிப் பார்க்கிறேன். நம் பிரதமர் அன்று இருந்திருந்தால் அந்த வரலாற்றுப் பிழை நிச்சயம் நடந்தும் இருக்காது. இந்திய மீனவர்களின் வாழ்வாதாரமும் உறுதியுடன் பாதுகாக்கப்பட்டிருக்கும்.

இறுதியாக அய்யன் திருவள்ளுவரின் “இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு” என்ற திருக்குறளை இந்த அவையில் நினைவு கூர்ந்து இந்த திருக்குறளுக்கு ஏற்ப பிரதமர் நரேந்திரமோடியும், நிதியமைச்சரும் இந்த நிதி நிலை அறிக்கையை தயாரித்துள்ளார்கள் என்பதை இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன். வரவுகளையும்- செலவுகளையும் மிக அருமையாக சம நிலைப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள தனிச்சிறப்பு மிகுந்த இந்த நிதிநிலை அறிக்கைக்கு பாராட்டுக்கள்.

இவ்வாறு கழக மக்களவை குழுத் தலைவர் ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி பேசினார்.