தற்போதைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளரை மக்கள் பார்க்க முடியாது – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

திருநெல்வேலி:-

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை சாதாரண மக்கள் பார்க்க முடியாது. அவரிடம் மனு கொடுக்க வேண்டும் என்றால் சென்னைக்கு தான் செல்ல வேண்டும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனுக்கு ஆதரவாக அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகின்றனர். களக்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் விருதுநகர் மாவட்ட கழக நி்ர்வாகிகள் கடந்த ஒருவார காலமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிங்கிகுளம், கீழகாடுவெட்டி, மேலகாடுவெட்டி, தெற்கு காடுவெட்டி, அப்பர்குளம், மீனவன்குளம், கள்ளிகுளம், துவரைகுளம், கல்லடிசிதம்பராபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நேற்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்தின்போது அவர் பேசியதாவது:-

கழக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் உள்ளூர் தொகுதியில் வசிப்பவர். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் நாராயணனை சந்திக்கலாம், குறைகளை சொல்லலாம். ஆனால் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரூபி மனோகரன் பிறந்தது கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம். சென்னையில் வசித்து வருகிறார். காஞ்சிபுரம் மாவட்ட தலைவராக உள்ளார்.

தற்போது நாங்குநேரி தேர்தலில் போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கும் காங்கிரஸ் வேட்பாளருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கி விடலாம் என்று காங்கிரஸ் வேட்பாளர் திட்டமிட்டுள்ளார். காங்கிரஸ் வேட்பாளருக்கு ஓட்டுப்போட்டால் மனு கொடுக்க சென்னைக்குதான் செல்ல வேண்டும்.

ஒரு முதியோர் மனு கொடுக்க வேண்டும் என்றாலும் கூட சென்னைக்குதான் செல்ல வேண்டும். காங்கிரஸ் வேட்பாளர் வீடு சென்னையில் எங்கு இருக்கின்றது. ஆதார் கார்டு எங்கு இருக்கிறது, ரேசன் கார்டு எங்கு இருக்கின்றது என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கே தெரியவில்லை. சாதாரண மக்கள் அவரை பார்க்கவே முடியாது.

இதற்கு முன்பு இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வசந்தகுமார் தொகுதி பக்கமே வரவில்லை. சென்னையில் அவர் தொழிலைதான் பார்த்தார். இந்த தொகுதியில் வெற்றிபெற்ற எம்.பி. இன்னும் நன்றி கூட சொல்ல ஊருக்குள் வரவில்லை. ஒருமுறை ஓட்டு போட்டு 5 வருடம் கஷ்டப்படாதீர்கள். கழக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டுப்போட்டு வெற்றிபெற செய்யுங்கள்.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.

வேட்பாளா் ரெட்டியார்பட்டி நாராயணன் பேசும்போது, உங்கள் வீட்டு பிள்ளையான எனக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன். கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றுவேன். கிராமங்களில் குடிநீர் பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன் என்று வாக்குறுதி அளித்தார்.

பிரச்சாரத்தின்போது சாத்தூர் ெதாகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், களக்காடு ஒன்றிய செயலாளர் ஜெயராமன், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் பாபு உட்பட ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், விருதுநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.