தற்போதைய செய்திகள்

நாங்குநேரி கழக வேட்பாளர் வெற்றி உறுதியாகி விட்டது – அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி

திருநெல்வேலி:-

நாங்குநேரி மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் மீது கோபமாக இருக்கிறார்கள். எனவே அந்த தொகுதியில் கழக வேட்பாளர் வெற்றி உறுதியாகி விட்டது என்று அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.

நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. நாங்குநேரி தொகுதி சாதாரண மக்கள் அதிகமாக வாழுகிற தொகுதி. சாதாரண மக்கள் எல்லாம் எல்லா காலத்திலும் கழகத்தை ஆதரித்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக இந்த பகுதியில் இருக்கிறவர்கள் கழகத்தின் மீதும், அம்மாவுடைய ஆட்சி மீதும் மிகுந்த பற்று பாசம் கொண்டிருக்கிறார்கள். எனவே கழக கூட்டணி வேட்பாளரான ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றாக இருக்கிறது.

நாங்குநேரி இடைத்தேர்தலை பொறுத்தவரை இது ஒரு புகுத்தப்பட்ட தேர்தல். மக்களால் கடந்த தேர்தலிலே வெற்றி பெற்று ஐந்தாண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார் இருப்பதை விட்டுவிட்டு பரப்பதற்கு ஆசைப்பட்டதை போல சட்டமன்ற உறுப்பினர் பதவியை விட்டு நாடாளுமன்றத் தேர்தலில போட்டியிட்டதால் இந்த தேர்தலை புகுத்தி இருக்கிறார்கள். எனவே இந்த தேர்தல் திணிக்கப்பட்ட தேர்தல். இதை மக்கள் மிக கோபமாக எதிர்கொள்கிறார்கள்.

கழகத்தை பொறுத்தவரை ஆளுங்கட்சியாக இருக்கிற இயக்கம். இந்த பகுதி தேவைகள் கூடுதலாக இருக்கிறது. இந்த பகுதி தேவைகளை நிறைவேற்றுவதற்கு ஆட்சியாளர்களால் தான் முடியும். அதை உறுதியாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நிறைவேற்றித் தருவார்கள் என்ற நம்பிக்கையில் இந்த பகுதி மக்கள் உள்ளார்கள். அதனை ஏற்று இந்த பகுதி மக்கள் கழக சட்டமன்ற வேட்பாளருக்கு வாக்களிக்க தயாராகி விட்டார்கள்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.