தற்போதைய செய்திகள்

பொய் சொல்வதில் கைதேர்ந்தவர் ஸ்டாலின் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

திருநெல்வேலி

கழக அரசு கவிழும் என்று காலத்தை ஓட்டும் ஸ்டாலின் பொய் சொல்வதில் கைதேர்ந்தவர் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

நாங்குநேரி தொகுதி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனை ஆதரித்து வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடந்த சில தினங்களாக திண்ணை பிரச்சாரம் மூலம் தொகுதி மக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

பாளை ஒன்றியம் தெற்கு அரியகுளத்தில் திண்ணை பிரச்சாரம் மூலம் வாக்கு சேகரித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

நாங்குநேரி தொகுதி விவசாய பூமி. நான் தொகுதி முழுவதும் சுற்றி பார்த்தபோது வேலை வாய்ப்பு தேடி படித்த இளைஞர்கள் வெளி மாவட்டங்களுக்கு, வெளி மாநிலங்களுக்கும் செல்லும் சூழ்நிலை இருக்கிறது. கருணாநிதியின் சிறப்பு திட்டங்களில் இந்த பகுதி மக்கள் எவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.

கருணாநிதியின் சிறப்பு மண்டல திட்டம் மக்களை ஏமாற்றும் செயல். புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாசியோடு, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்துள்ள கழக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் அம்மாவின் பிரதிநிதி. நீங்கள் இரட்டை இலைக்கு வாக்களித்து இவரை தேர்வு செய்யப்படும் பொழுது நாங்குநேரி தொகுதி முழு தன்னிறைவு பெறும்.

கழக எம்.எல்.ஏ.வாக ரெட்டியார்பட்டி நாராயணனை நீங்கள் தேர்வு செய்தால் பிரச்சினைகள் முழுவதும் சரிசெய்து விடுவோம். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் வெளிநாடு சென்று வந்ததை குறை கூறுகிறார். முதலமைச்சர் ஐரோப்பிய நாடுகள் அரேபிய நாடுகள் என பல நாடுகளுக்கு சென்று 47 புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு ஒன்பதாயிரம் கோடி ரூபாய்க்கு அந்நிய முதலீடு கொண்டு வந்துள்ளார்.

கருணாநிதியின் சிறப்பு மண்டலம் ரூ.15 கோடியில் துவக்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலை கிடைத்ததாக உண்மைக்கு புறம்பான தகவல்களை தி.மு.க.வினர் பரப்பி வருகின்றனர். முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் ஸ்டாலின். நாங்கள் சிறப்பு மண்டலத்தை சிறப்பாக செயல்படுத்த முயற்சி எடுத்து வருகிறோம்.

கழக அரசின் நடவடிக்கையால் உலகம் தமிழகத்தை திரும்பி பார்க்கிறது. உலக மக்கள் திரும்பி பார்க்கிறார்கள். சீன அதிபரும், இந்திய பிரதமரும் மாமல்லபுரத்தில் பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. உலகத்தை சுற்றி வந்து தமிழகத்தின் பெருமையை உலகத்திற்கு எடுத்துக் காட்டியவர் விவசாயி மகனான முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி. நாங்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிகளை கழகமும் கைப்பற்றும். இந்த தொகுதிகள் எதிர்க்கட்சியிடமிருந்து ஆளுங்கட்சிக்கு கிடைக்கப்போவது உறுதி.

கழக அரசு கவிழும் என்று ஸ்டாலின் ஒரு லட்சம் தடவை சொல்லி விட்டார். இது தவிர நாங்கள் பணம் கொடுப்பதாக ஒரு பொய்யான குற்றச்சாட்டை தற்போது கூறி வருகிறார். அவருக்கு இதை தவிர வேறு எதுவும் தெரியாது. அம்மா மீதும், இரட்டை இலை மீதும் அன்பும் பாசமும் வைத்தவர்கள் நீங்கள்.

தொண்டர்களை திருப்திபடுத்தவே பலாப்பழம் கிடைக்கும் என்று கூறி ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக வழிந டத்தி வருகிறார்கள். வன்னியர்களுக்கு அனைத்து உரிமைகளையும், நன்மைகளையும் கழகம் தான் செய்துள்ளது. நலவாரியம், மணிமண்டபம் தந்தது கழக அரசு. நீங்கள் உங்கள் தொகுதி வளர்ச்சி அடைய ஆளும் கட்சி வேட்பாளரான ரெட்டியார்பட்டி வெ.நாராயணனுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

இதைத்தொடர்ந்து தெற்கு அரியகுளம், தேவேந்திரகுல மக்கள் காலனி ஆகிய பகுதிகளில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் கே.மாணிக்கம், எஸ்.எஸ்.சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ பாண்டியம்மாள், ஒன்றிய கழக செயலாளர் பிச்சைராஜன், திருநெல்வேலி மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஜெரால்டு, அவைத்தலைவர் கணபதி சுந்தரம், கிளை செயலாளர் ஜெயசிங் ஆகியோர் உடன் இருந்தனர்.