தற்போதைய செய்திகள்

மக்களை ஏமாற்றி வெற்றி பெற நினைக்கும் ஸ்டாலினின் எண்ணம் இனி நிறைவேறாது – அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

திருநெல்வேலி:-

மக்களை ஏமாற்றி வெற்றி பெற நினைக்கும் ஸ்டாலினின் எண்ணம் இனி நிறைவேறாது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திட்டவட்டமாக கூறினார்.

நாங்குநேரி தொகுதியில் கழகம் சார்பில் போட்டியிடும் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனை ஆதரித்து பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நேற்று களக்காடு ஒன்றியம் மீனவன்குளம், கீழசிதம்பராபுரம், சிங்கிகுளம் உள்பட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். சாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், களக்காடு ஒன்றிய கழக செயலாளர் ஜெயராமன், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் பாபு மற்றும் பலர் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.

பிரச்சாரத்தின்போது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா வழியில் தமிழகத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். ஒரு விவசாயி தமிழகத்தை ஆள்வதால் இன்று ஏழை, எளிய மக்கள் அதிகளவு பயனடைகின்றனர். எனவே கிராம மக்கள் இரட்டைஇலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலை போன்று மக்களை ஏமாற்றி வெற்றிபெற நினைக்கும் ஸ்டாலினின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. அவருக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொழிலாளர்கள் அனைவருக்கும் ரூ.2000 சிறப்பு நிதி அறிவித்து அத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனால் கழக அரசுக்கு நல்ல பெயர் கிடைத்து விடக்கூடாது என்ற கெட்ட எண்ணத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நீதிமன்றம் சென்று அதனை தடுத்து விட்டார்.

விரைவில் அனைவருக்கும் ரூ.2000 கண்டிப்பாக வழங்கப்படும். தொழிலாளர்களுக்கு எப்போதும் பாதுகாப்பு அரணாக கழக அரசு திகழும். அரசின் திட்டங்கள் தொடர்ந்து கிடைத்திட நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் நாராயணனுக்கு இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும்.

கடந்த திமுக ஆட்சியில் தமிழகத்தில் மின்தட்டுப்பாடு இருந்தது. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டார்கள். 2011-ல் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற ஒரே ஆண்டில் மின்தட்டுப்பாட்டை போக்கி தமிழகத்தை மின்மிகை மாநிலமாக உருவாக்கினார். இன்றைக்கு ஒரு சிறப்பான ஆட்சியை நடத்தி வரும் எடப்பாடியார் தொடர்ந்து மின்சாரத்தை உற்பத்தி செய்து நமக்கு போக மீதியை அண்டை மாநிலங்களுக்கு வழங்கி வருகிறார்.

தமிழகத்தில் தான் உணவு பாதுகாப்பு உள்ளது. இங்கு தான் மாதந்தோறும் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது. அதிகமாக அரிசி உற்பத்தி செய்யும் மாநிலமான கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கூட இத்திட்டம் கிடையாது. அதே போல் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்கமும், திருமண நிதியுதவி வழங்கப்படுகிறது. தங்கத்தை வெட்டி எடுக்கும் நாடுகளில் கூட இத்திட்டம் கிடையாது.

இந்தியாவில் உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இரண்டு சக்கர வாகன திட்டம் தமிழகத்தில் தான் செயல்படுத்தப்படுகிறது. ஆகவே மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நல் ஆட்சியை வழங்கி வரும் எடப்பாடியார் அரசிற்கு உங்களின் ஆதரவை தந்திடும் வண்ணம் நடைபெறும் இடைத்தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.