சிறப்பு செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை – அமித்ஷாவை சந்தித்து முதலமைச்சர் வலியுறுத்தல்

புதுடெல்லி:-

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி புதுடெல்லியில் நடைபெற்ற மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது பற்றிய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். இக்கூட்டத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை வகித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் புதுடெல்லியில் மத்திய உள்துறை அமித்ஷாவை அவரது இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சந்தித்து அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் உடன் இருந்தனர்.

இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் தமிழக அரசு செய்து கொடுக்கிறது. அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை மற்றும் 20 கிலோ அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, ஈழத்தில் இருந்து தமிழகம் வந்த தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி இருக்கிறார். அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதற்கு ஏதுவாக சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கேட்டுக் கொண்டார்.

டெல்லியில் மகாத்மா காந்தி 150-வது பிறந்தநாள் விழா ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டபோது இடையில் பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சந்தித்து பேசினார். அப்போதும் இதே கோரிக்கையை பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்தினார்.