தற்போதைய செய்திகள்

குத்தியாலத்தூர், தலைமலை ஊராட்சிகளில் துணை மின் நிலையம் அமைக்க பரிசீலனை – ஈஸ்வரன் எம்.எல்.ஏ கேள்விக்கு அமைச்சர் பி.தங்கமணி பதில்

சென்னை

குத்தியாலத்தூர் – தலைமலை ஊராட்சிகளில் துணை மின் நிலையம் அமைக்க பரிசீலனை செய்யப்படும் என்று ஈஸ்வரன் எம்.எல்.ஏ கேள்விக்கு அமைச்சர் பி.தங்கமணி பதிலளித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பவானிசாகர் தொகுதியின் கழக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஈஸ்வரன் பவானிசாகர் தொகுதி, சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், குத்தியாலத்தூர் ஊராட்சியில் துணை மின் நிலையம் அமைக்க அரசு ஆவன செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி அங்கு மலைவாழ் மக்கள் வசிக்கின்ற பகுதியாக இருக்கின்ற காரணத்தினால், அந்தப் பகுதியிலே, எங்கேயாவது தனியார் இடம் இருக்கின்றது என்று உறுப்பினர் சொன்னால், அதை வாங்கி கொடுப்பார்கள் என்று சொன்னால், அங்கே நிலம் கண்டறியப்பட்டவுடன் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். ஏனென்று சொன்னால், அங்கு துணை மின் நிலையம் தேவையான ஒன்றாகும்.

இருந்தாலும், அங்கு மலைவாழ் மக்கள் அதிகமாக வசிக்கின்ற காரணத்தினால், தனியார் நிலம் இல்லாத காரணத்தினால், துணை மின் நிலையம் அமைப்பதற்கு வாய்ப்பில்லாமல் இருக்கிறது. உறுப்பினரால் நிலம் அடையாளம் காணப்பட்டு, இடம் கொடுப்பார்கள் என்று சொன்னால், அங்கு துணை மின் நிலையம் அமைக்கப்படும் என்றார்.

தொடர்ந்து உறுப்பினர் எஸ். ஈஸ்வரன் குத்தியாலத்தூர் ஊராட்சியில் உள்ள பவளக்குட்டை பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அந்தப் பகுதியில் மிக விரைவில் இடம் கண்டறிந்து, புதிய துணை மின் நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். என்றார். தொடர்ந்து அமைச்சர் பி. தங்கமணி உறுப்பினர் அந்தப் பகுதியிலே அரசு புறம்போக்கு நிலமிருக்கிறது என்று சொல்லியிருக்கின்றார்.

அப்படியிருக்கிறது என்று சொன்னால், வருவாய்த் துறை அதிகாரிகளோடு அதுகுறித்து கலந்து பேசி, உடனடியாக அங்கே துணை மின் நிலையம் அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். ஏனென்று சொன்னால், பெரும்பள்ளம் பகுதி துணை மின் நிலையத்திலிருந்துதான் கடம்பூர் பகுதிகளுக்கு மின்சாரம் வந்து கொண்டிருக்கின்றது. கிட்டத்தட்ட 41.3 கிலோ மீட்டர் தூரம் இருக்கின்ற காரணத்தினால் மின்னழுத்தம் குறைவாக இருக்கின்றது.

நான் ஏற்கெனவே சொன்னதைப்போல, அந்தப் பகுதியிலே துணை மின் நிலையம் தேவைதான். உறுப்பினர் அந்தப் பகுதியிலே புறம்போக்கு நிலத்தை கண்டறிந்து கொடுத்தால், உடனடியாக துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தாளவாடி வட்டம், தலைமலை ஊராட்சிப் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்கவேண்டும் என்று கேட்டுள்ளார். உறுப்பினர் அந்தப் பகுதியில் நிலமிருக்கிறது என்று சொல்லியிருக்கின்றார்.

அதனால் துறை அதிகாரிகளோடு உறுப்பினர் கலந்து பேசச் சொல்லி, அங்கே இடமிருக்கிறது என்று சொன்னால், உடனடியாக ஆய்வு செய்து, நிலமெடுப்பதற்குண்டான நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல், உறுப்பினர் ஒருமுனை மின்சாரம் இருக்கின்றது. அதை மும்முனை மின்சாரமாக மாற்றித் தரவேண்டுமென்று கேட்டிருக்கின்றார். வீடுகள் இருக்கின்ற பகுதியிலே ஒருமுனை மின்சாரம் மட்டும்தான் இருக்கின்றது. அந்தப் பகுதி விவசாயம் நிறைந்த பகுதியாக இருந்தால், அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.