தற்போதைய செய்திகள்

பழனி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மினி ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை – பேரவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி

சென்னை

100 ஆண்டுகள் பாரம்பரியமிக்க பழனி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மினி ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதியளித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பழனி தொகுதி உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் பழனி தொகுதிக்குட்பட்ட பாலசமுத்திரம் பேரூராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்ட அரசு முன் வருமா என்றும். அதேபோல் பழனி நகரத்தில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மினி ஸ்டேடியம் அமைக்க அரசு முன் வருமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளித்து பேசியதாவது:-

பாலசமுத்திரம் பேரூராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி 239 மாணவர்கள் பயன்று வருகின்றனர். இதில் மாணவர்கள் எண்ணிக்கை 118, மாணவிகள் எண்ணிக்கை 121 ஆகும். அங்கு தற்போது 5 கட்டடங்கள் உள்ளன. அதில் 9 வகுப்பறைகள் இருக்கிறது. எனவே இந்த கட்டடங்கள் போதுமானதாக உள்ளன. இருந்தபோதிலும் துறை ரீதியாக ஆய்வு செய்து பரிசீலிக்கப்படும்.

அந்த பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். பழனி நகரின் மைய பகுதியில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 500 பேர் பயின்று வருவதாகவும், 1918-ம் ஆண்டு துவக்கப்பட்டு 100 ஆண்டை கடந்த வரலாற்று சிறப்பு மிக்க பள்ளி என்றும், அங்கு 11.5 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், அதில் மினி ஸ்டேடியம் அமைத்து தர வேண்டும் என்றும் உறுப்பினர் கோரிக்கை வைத்துள்ளார்.

அந்த பள்ளி நூறாண்டு பழமை வாய்ந்த பள்ளி என்பதாலும், பழனி முக்கியமான நகரம் என்பதாலும், பள்ளி கல்வித்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று அங்கு மினி ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனது துறை சம்பந்தப்பட்ட பணிகள் நிறைவேற்றி தரப்படும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளித்தார்.