தற்போதைய செய்திகள்

18 எம்.எல்.ஏ.க்களின் வாழ்க்கையை கெடுத்தவர்கள் தினகரன்,ஸ்டாலின் : அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் குற்றச்சாட்டு

திண்டுக்கல்:-

மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும், டி.டி.வி.தினகரன் துணை முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு 18 எம்.எல்.ஏ.க்களின் வாழ்க்கையை கெடுத்து விட்டார்கள் என திண்டுக்கலில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் குற்றம்சாட்டி உள்ளார்.

திண்டுக்கல் நத்தம் ரோடு டி.எஸ்.எல். மஹாலில் ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கலந்து கொண்டு 4000 பயனாளிகளுக்கு ரூ.28.22 கோடி மதிப்பிலான திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கத்தினை வழங்கினார்.

நிகழ்ச்சி முடிந்ததும் வெளி வந்த அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் சளைக்காமல் பதிலளித்தார். அதன் விபரம் வருமாறு:-

கேள்வி:- இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
பதில்:- விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளில் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் கழகம் வெற்றிபெறும்.

கேள்வி:- தமிழகத்தில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறுவதாக மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறாரே?

பதில்:- சீன அதிபரை தமிழகத்திற்கு வரவழைத்து பேசுவதற்காக பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். அதிலிருந்து அவரும் எங்களுடன் தான் இருக்கிறார் என்று தெரிகிறது.

கேள்வி:- சத்தியமங்கலம் பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி வருகிறது?
பதில்:- குட்டி யானையை தேடி யானைகள் வருவது இயற்கையானது. யானைகளிடம் இருந்து மக்களை காக்கும் பணியை வனத்துறை சிறப்பாக செய்து வருகிறது. யாருக்கும் எந்த பாதிப்பும் வராத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி:- 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிபோனதற்கு டி.டி.வி.தினகரன் தான் காரணம் என்று புகழேந்தி கூறியிருக்கிறாரே?

பதில்:- 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிபோனதற்கு டி.டி.வி.தினகரன் மட்டும் காரணம் அல்ல. மு.க.ஸ்டாலினும் தான் காரணம். அவர் முதலமைச்சராக வேண்டும். டி.டி.வி. தினகரன் துணை முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு 18 எம்.எல்.ஏ.க்களின் வாழ்க்கையை கெடுத்து விட்டார்கள்.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட கழக செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான வி.மருதராஜ், வேடசந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம், ஒன்றிய கழக செயலாளர் ஜெயசீலன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.