தற்போதைய செய்திகள்

ஓட்டுக்களை விலைக்கு வாங்க காங்கிரஸ் வேட்பாளர் திட்டம் – கழக எம்.எல்.ஏ. அன்பழகன் குற்றச்சாட்டு

புதுச்சேரி, அக். 13-

புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஓட்டுக்களை விலைக்கு வாங்க திட்டமிட்டுள்ளதாக கழக எம்.எல்.ஏ. அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கழக கூட்டணி சார்பில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனா (எ) புவனேஸ்வரனை ஆதரித்து கழக சட்டமன்ற குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று முத்தியால்பேட்டை செந்தாமரை நகரில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்த அரசுக்கு ஆட்சி அதிகாரத்தை மக்கள் கொடுத்துள்ளனர். அதை பயன்படுத்தி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். ஸ்மார்ட் சிட்டி, அம்ருத் திட்டம், சுற்றுலா மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.3500 கோடி வரை நிதி உதவி கொடுத்துள்ளது. ஆனால் இந்த அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மாநில அரசின் பங்கை கொடுக்கவில்லை. மத்திய அரசிடம் நிதியை பெற்று கொண்டு, அதையே குறை கூறி கொண்டுள்ளது.
என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் ரங்கசாமி அனைத்து வீடுகளுக்கும் தலா 20 கிலோ இலவச அரிசியை தடையின்றி கொடுத்து வந்தார். ஆனால் இந்த அரசு பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகளில் அரிசியாக 17 மாதமும், பணமாக 5 மாதமும் வழங்கியுள்ளது. மீதி 20 மாதங்களுக்கு அரிசிக்குரிய பணத்தை கொடுக்கவும், கடந்த இரண்டு ஆண்டுகாலமாக அரிசிக்காக ரூ.400 கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 200 கோடியை மட்டுமே செலவு செய்துள்ளனர். மீதி 2 கோடி ரூபாய் எங்கே ?
அரசு துறைகளில் 9 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. ஒன்றையாவது நிரப்பினார்களா? அரசு சார்பு நிறுவன 15 ஆயிரம் ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை. அங்கன்வாடி ஊழியர்களை நாட்டிலேயே முதல் முறையாக பணிநிரந்தரம் செய்தவர் ரங்கசாமிதான். இந்த அரசு அங்கன்வாடியில் காலியாக உள்ள பணியிடங்களையும் நிரப்பவில்லை, நிரந்தரமற்றவர்களாக இருப்பவர்களையும் பணி நிரந்தரம் செய்யவில்லை. இவைகளை செய்வதற்கு மனதும், திறமையும் இந்த அரசிடம் இல்லை. ஆட்சி அதிகாரத்தை வைத்து கொண்டு கையில் கிடைப்பதை சுரண்டுகிறது. மக்களுக்கு செய்வதை தடுக்கும் எண்ணம் ரங்கசாமிக்கு இல்லை. மனித பண்பாளர் ரங்கசாமி. கீழ்த்தரமான அரசியல்வாதி இல்லை.
நெல்லித்தோப்பில் ஓட்டுக்களை விலைக்கு வாங்கி விற்பனை செய்தவர்தான் ஜான்குமார். தற்போது இத்தொகுதியில் ரூ.3 ஆயிரத்திற்கு ஓட்டுக்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. பின்னர் அதை என்ன விலைக்கு விற்பாரோ?

ஆண்டிற்கு 11 நாட்கள் மட்டுமே சட்டசபை கூட்டப்படுகிறது. அமைச்சர்களுக்குள் கோஷ்டி பூசல் உள்ளது. எம்.எல்.ஏ.க்களிடம் பிரச்சினை உள்ளது. சபாநாயகர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு கூட இந்த அரசுக்கு தைரியம் இல்லை. குறைந்த நாட்களே சட்டசபையை நடத்துவதால் புதுச்சேரிக்கு சட்டசபை தேவையா? என்ற எண்ணத்தை மத்திய அரசிடம், இந்த அரசு உருவாக்கி வருகின்றது. ரங்கசாமி தனது ஆட்சிக் காலத்தில் ஆண்டிற்கு மூன்று முறை 30 நாட்கள் சட்டசபையை நடத்தினார். சட்டசபை கூட்டத் தொடர் மட்டுமே 23 நாட்கள் நடைபெறும். பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியையும் செலவு செய்யவில்லை. எனவே திமுக துணையோடு ஆட்சி புரியும் இந்த அரசுக்கு பாடம் புகட்டிட நடைபெற உள்ள காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனுக்கு ஜக்கு சின்னத்தில் தொகுதி மக்கள் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. பேசினார்.